Wednesday 5 October 2011

தசையினைத் தீ சுடினும்.........

சமீபத்தில் ரசித்த கவிதை?''


 '' 'ரசித்த’ என்று சொல்ல முடியாது. அலையலையாகப் பல்வேறு உணர்வுகளை எழுப்பி அலைக்கழித்த கவிதை. எழுத்தா ளரும் விடுதலைச் சிறுத்தைகள் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமாரின் 'தமிழராய் உணரும் தருணம்’ என்ற நூலில் வாசிக்க வாய்த்த கவிதை. 1983-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தின் ஒரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையாகப் பதிவுசெய்திருக்கிறார். மொழியாக்கம் கவிஞர் சேரன். கவிதை இதுதான்.

'ஜூலை: மேலும் ஒரு சம்பவம்
இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த
எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து
எஞ்சியிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்.
சித்தம் குழம்பியனாகவும்
ஒருபோதும் இருந்ததில்லை.
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை
வெளிக்காட்டத் தயங்குபவன்.
அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட.
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாக மறந்துவிடுகிறேன்.
மறப்பதில் எனக்கிருக்கும் திறமைபற்றி
எவருக்குமே ஐயம் இருந்ததில்லை.
என்னை ஒருவரும்
குறை சொன்னதும் கிடையாது.
எனினும் அந்தக் கும்பல் அந்த காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்.
ஏனைய கார்களை
எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் அந்த காரையும்
தடுத்து நிறுத்தினார்கள்.
எந்த வேறுபாடும் இல்லை.
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள்.
செய்வதைப் பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்.
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல.
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விஷயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
கதவுகளைத் திறந்தான்.
அழுது அடம்பிடித்து
பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும்
வெளியே இழுத்தெடுத்தான்.
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில்கொள்ளாமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது
என அவன் எண்ணியிருக்கக்கூடும்.
துரிதமாகச் செயல்பட்ட இன்னொருவனோ
தீக்குச்சியைக் கிழித்தான்.
சுற்றிலும் எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது.
அருகே நின்று
தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சம் பேர்.
கலைந்து போனார்கள் ஒரு சிலர்.
காருக்குள் இருந்த இருவரும்
என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.
அப்போதுதான் உள்ளேயிருந்தவர்
திடீரென
கார் கதவை உடைத்து
வெளியே பாய்ந்தார்.
சட்டையிலும் தலைமயிரிலும்
ஏற்கெனவே தீப்பற்றிவிட்டிருந்தது.
குனிந்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்.
எங்கும் பார்க்காமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்.
தனித்துவமான அந்த சப்தத்தை
நான் கேட்டேன்.
எரிந்தழிந்த கார் இப்போதும்
தெருவோரம் கிடக்கிறது.
ஏனையவற்றோடு
இன்னும் சில நாட்களில்
மாநகராட்சி அதனை அகற்றக் கூடும்
தலைநகரின் தூய்மையே
 ஆட்சியாளர்களின் தலையாய பணி!



 ஒரு மாற்று இனத்தைச் சேர்ந்தவர் தமிழர் களின் மீதான இனக் கலவரத்தைப் பதிவு செய்தது முக்கியமான விஷயம். மேலும், இன வெறி உச்சத்தில் இருக்கும் ஒருவனுக்கு அந்தக் குழந்தைகளை காரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கண நேரத்தில் தோன்றிய எண்ணம். ஆனாலும் தானும் தன் மனைவியும் இறந்த பிறகு தங்கள் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகத் திரிவதை விட, அவர்களுக்கு வேறு எந்தக் கொடூரத் தண்டனையையும் வழங்க முடியாது என்கிற தமிழரான அந்தத் தந்தையின் எண்ணம் எனப் பல்வேறு வகையான மன உணர்வுகளும் வாசிப்பவரைச் சிதைத்துப் போடுகிறது!
 

No comments:

Post a Comment