Monday 5 December 2011

கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?

ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி – கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா?

இன்றைய நவீன வாழ்க்கையில் நாம் விசித்திரமான ஒரு சிக்கலில் உள்ளோம். நவீனக்கல்விமுறை நம்முடைய தர்க்கபுத்தியைப் பெருமளவுக்கு வளர்த்துள்ளது. அது நம்மை நிரூபணவாத அறிவியலின் ஆதரவாளர்களாக வைத்திருக்கிறது. ஆனால் இந்தக்கல்வி என்பது வாழ்க்கையை, பிரபஞ்சத்தை, நம் உடலைப் புரிந்துகொள்ளுமளவுக்கு முழுமையாகவும் இல்லை.புரிந்துகொள்ளாதவற்றை நம்மால் நம்ப முடியவில்லை. புரிந்துகொள்ளுமளவுக்கு நமக்குக் கல்வியும் வாழ்க்கைச்சூழலும் இல்லை.
ஏன் அந்தச்சிக்கல்? நம்முடைய மரபு மனிதவாழ்க்கையை இரு பிரிவாகப் பிரித்து வைத்திருக்கிறது. அடிப்படையான மானுட இயல்புகளைக்கொண்டு இந்தப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது. ஞானமார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள், கர்ம மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள். ஞானம்- கர்மம் என்ற இப்பிரிவினை இந்திய சிந்தனையின் ஏறத்தாழ எல்லாத் தளங்களிலும் வந்துகொண்டே இருப்பதைக் காணலாம்
வாழ்க்கையை முழுமையாக வாழ விழைவது என கர்ம மார்க்கத்தைச் சொல்லலாம். அது செயலின் வழி. இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குரிய வழிகள் என்னென்ன என்று முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவற்றை நம்பி ஏற்று முழுமையாகக் கடைப்பிடிப்பதே கர்மத்தின் பாதையாகும். அதில் நம்பிக்கையும் கட்டுப்பாடும்தான் முக்கியமான இடம் வகிக்கின்றன.
                                                       
மக்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்குக் கர்ம மார்க்கமே உகந்த வழியாக இருக்கமுடியும் என்பதே முன்னோர்களால் கண்டறியப்பட்ட உண்மை.சரியானதெனக் காட்டப்பட்டுள்ள பாதையில் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் முன் செல்வது அது. காரணம் அனேகமாக மக்கள் அனைவருக்கும் லௌகீக வாழ்க்கையே முக்கியமானது. அதன் இன்பங்களையும் வெற்றியையும் நிறைவையுமே அவர்கள் தேடுகிறார்கள். கர்ம மார்க்கமே அதை அளிக்க வல்லது.
பக்தி, வழிபாடு போன்றவையே இங்கே கர்ம மார்க்கிகளுக்கான ஆன்மீகமாக முன்வைக்கப்பட்டன. நம்பிக்கை,சடங்குகள்,ஆசாரங்கள் ஆகியவற்றாலானதே பக்தி.நம்மிடையே பிரபலமாக உள்ள செமிட்டிக் மதங்கள் கர்ம மார்க்கத்தை மட்டுமே முன்வைக்கின்றன. உறுதியான, முழுமையான நம்பிக்கையை மட்டுமே அவை வழியாகச் சுட்டிக்காட்டுகின்றன.
        
                                                         
இரண்டாவது வழி ஞான மார்க்கம். அது நம்பிக்கையின் வழி அல்ல. அறிதலின் வழி. ஆராய்தலின் வழி.வாழ்க்கையை வாழ்வதை விட வாழ்க்கையை அறிவதும் கடந்துசெல்வதுமே அதற்கு முக்கியம்.வாழ்க்கையை அறிவதற்காக வாழ்க்கையை இழப்பதற்கும் துணிபவனே ஞான மார்க்கி. அவனுக்கு லௌகீக வாழ்க்கையின் வெற்றியும் நிறைவும் முக்கியமல்ல. அவனுடைய வெற்றியும் நிறைவும் அவன் அடையும் ஞானத்தில் மட்டுமே உள்ளது.
ஞானமார்க்கம் மிகமிகச் சிலருக்கே உரியது. அவர்களால் மட்டுமே லௌகீகத்தை விட ஞானத்தை முதன்மையாகக் கொள்ளமுடியும். ஆகவேதான் இந்து மரபில் கர்ம மார்க்கம் எப்போதுமே பெரும்பாலானவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஞானமார்க்கம் பல தடைகளுக்கு அப்பால் சென்றடையவேண்டிய ஒன்றாக வைக்கப்படுகிறது. ஒருவன் ஆழ்ந்த சுயபரிசோதனைகள் வழியாக உண்மையிலேயே அவனுக்குத்தேவையானது ஞானம்தானா என்று அறிந்து தெளிந்தபின்னரே ஞானமார்க்கத்தைக் கண்டடையவேண்டுமென சொல்லப்படுகிறது.
இதனால்தான் இந்து மதத்தில் கோயில்களும் வழிபாடுகளும் அனைவருக்கும் உரியவையாக முன்வைக்கப்பட்டன. ஞானநூல்கள் குரு வழியாகக் கற்கப்பட்டாலே சிறப்பு என வரையறைசெய்யப்பட்டன. தியானமும் யோகமும் குருமுகத்தில் இருந்து மட்டுமே அறியப்படவேண்டும் என்று வகுக்கப்பட்டன. [விஷ்ணுபுரம் வாசிக்கிறீர்கள் என்பதனால் சொல்கிறேன். பிங்கலனுக்கும் அவன் குருநாதருக்குமான விவாதத்தில் இவ்விஷயம் பேசப்படுகிறது]
இத்தகைய கர்மம்- ஞானம் என்ற பிரிவினை சமண மதத்திலும், பௌத்த மதத்திலும் இன்னும் துல்லியமாகவும் அப்பட்டமாகவும் செய்யப்பட்டிருந்தது. ஞானத்தை முதன்மையாகக் கொண்டவர்களே துறவிகளாகவும் பிட்சுகளாகவும் ஆகவேண்டும். ஞானத்துக்காகப் பிற அனைத்தையும் துறந்து விடவேண்டும். பிறர் அடிப்படையான நெறிகளையும் ஆசாரங்களையும் பின்பற்றி இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.
                                                     
இந்தப் பிரிவினை இந்தியாவில் நெடுநாட்களாக இருந்து வந்தது. நவீனக்கல்வி என்ன செய்கிறதென்றால் இளமையிலேயே நம்முடைய தர்க்கபுத்தியை வலுவானதாக ஆக்கி நம்முடைய நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறது. பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய மனநிலை இல்லாமலாகிவிடுகிறது. ஒவ்வொன்றையும் காரண காரிய அறிவுடன் புரிந்துகொள்ளவேண்டிய ஆவலை உருவாக்கிவிடுகிறது.
அதேசமயம் ஞானத்தை முதன்மையாக ஆக்கிக்கொண்டு, லௌகீகத்தை உதறி , தேடலையும் அறிதலையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழவும் நாம் தயாராக இல்லை. நாம் விழைவது லௌகீகத்தை மட்டுமே. ஒருவன் விழைவது நல்ல குடும்ப வாழ்க்கையும், நல்ல தொழிலும், நல்ல உறவுகளும்,ஆரோக்கியமும்தான் என்றால் அவன் அழுத்தமான நம்பிக்கையுடன் ஆலயத்துக்குத்தான் செல்வதே மதம் காட்டும் வழி. ஆனால் அப்படிப்பட்ட லௌகீக விழைவுள்ள ஒருவனால் ஆலயத்துக்கு நம்பிச்செல்லமுடியவில்லை என்றால் என்ன செய்வது?
சாதாரணமாக மனிதர்கள் இளமைப்பருவத்தைத் தாண்டி வாழ்க்கையின் சிக்கல்களையும் தற்செயல்களையும் சந்திக்கும் தருணத்துக்கு வரும்போது, தங்கள் தர்க்கபுத்தியின் எல்லைகளைத் தாங்களே உணர்ந்துகொண்டு நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதே வழக்கம். மிகச்சிலரே அப்படி உருவாக்கிக்கொள்ளமுடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

 அவர்களுக்காகவே ஜக்கி,ரவிசங்கர் போன்ற நவீனகுருமார்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. அவர்கள் செய்யும் பணியை ஞான-கர்ம சமுச்சயம் என்று சொல்லலாம். லௌகீக விழைவுடன் ஆனால் ஞானத்தின் வினாக்களுடன் இருப்பவர்களுக்கு ஒரு நடுப்பாதையை அவர்கள் உருவாக்கி அளிக்கிறார்கள்.ஞானமார்க்கத்தின் வழிகளையும் விடைகளையும் எளிமைப்படுத்தி கர்மமார்க்கத்தில் செல்பவர்களுக்கு அளிக்கிறார்கள்.அதற்கான தேவை உள்ளது என்பதையே அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் செல்வாக்கு காட்டுகிறது.
இந்த நவீன குருமார்களை நம்பிச்செல்பவர்களை நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருப்பவை லௌகீகமான பிரச்சினைகள். மன அமைதியின்மை, சோர்வு, உடல்நலக்குறைவு, உறவுச்சிக்கல்கள். அவற்றை அவர்கள் அறிவார்ந்து புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதாவது தங்கள் தர்க்கபுத்திக்கு நிறைவளிக்கும் ஒரு விடையை ஒரு குரு சொல்லவேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.
ஆகவே ஞானமார்க்கத்தில் இருந்து குரு லௌகீக தளத்திற்கு வந்தாகவேண்டியிருக்கிறது. ஞானம் தேடும் சீடனைக் கைப்பற்றி அழைத்துச்செல்லவேண்டிய குரு என்ற ஆளுமை லௌகீக வாழ்க்கை சார்ந்த விளக்கங்களைச் சொல்பவராக உருவம் கொள்ளவேண்டியிருக்கிறது. ஞானம்தேடுபவர்கள் சிலர் என்றால் லௌகீகமான விளக்கமும் வழிகாட்டலும் தேடுபவர்கள் பலகோடி. ஆகவே அவர் தன் குரல் அனைவரையும் சென்றடைவதற்காக அமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்லும் கார்ப்பரேட் குரு என்ற முத்திரை விழுகிறது
நீங்கள் சொல்லும் எல்லாப் பிரச்சினைகளும் இந்தத் தளம் சார்ந்தவை மட்டுமே. உதாரணமாகக் கட்டணம். இந்த குருக்களை நம்பி வரக்கூடியவர்கள் எளிமையான லௌகீக மனம் கொண்டவர்கள், லௌகீகமான பிரச்சினைகளுக்காக வருபவர்கள். ஞானம் தேடிவரும் முமுட்சுக்கள் அல்ல. அவர்களின் மனநிலை ஒரு பயனுள்ள சேவையை வாங்கிப் பயன்படுத்துவது என்ற அளவில்தான் உள்ளது. அதற்கு அவர்கள் அளிக்கும் பணமே அவர்களைப்பொறுத்தவரை அவற்றின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. அது மட்டும் இலவசமாக அளிக்கப்பட்டால் அவர்கள் கண்ணில் அது பயனற்றதாகவே இருக்கும்.
யோகம் தியானம் போன்றவை குறைந்தபட்சம் சிலமாதங்களேனும் தொடர்ச்சியாகச் செய்யவேண்டியவை. நான் அவதானித்தவரை இந்த குருக்களின் உயர்ந்த கட்டணம் காரணமாகவே பலர் அதைக் கொஞ்சகாலம் தொடர்ந்துசெய்கிறார்கள் -காசு கொடுத்து வாங்கியதாயிற்றே. அதனால்தான் பலருக்கு அது பலனளிக்கிறது. மலிவாகக்கொடுக்கும்தோறும் நான்குநாள் சென்று உட்கார்ந்துவிட்டு சில்லறை விமர்சனங்களுடன் கிளம்பி வருபவர்களே வந்து குவிவார்கள். என்னுடைய கருத்து இன்னும்கூடக் கட்டணம் அதிகமாக வைக்கலாம் என்றுதான். ஒரு எளிய மருத்துவத்துக்கு ஆகும் செலவுகூட இப்போது இந்த தியானமுறைகளுக்கு ஆவதில்லை.
இன்னொன்று குருவைக் கடவுளாக ஆக்கும் போக்கு. அதுவும் இந்த லௌகீகமான மனநிலையில் இருந்து வருவதே. அந்த குரு நினைத்தால்கூட அதைத் தவிர்க்கமுடியாது. வருபவர்கள் லௌகீகமானவர்கள், கர்ம மார்க்கத்துக்கான மனநிலையும் பக்குவமும் கொண்டவர்கள். சம்பிரதாயமான கடவுள் வடிவங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் கொஞ்சம் தர்க்கபூர்வமான கடவுளை அவர்கள் நாடுகிறார்கள் அவ்வளவுதான்.
இந்த யோகப்பயிற்சிகளினால் பலன் உண்டா என்று என்னிடம் எப்போதும் நண்பர்களும் வாசகர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பலன் என்பது அவற்றைக் கடைப்பிடிப்பவர்களைப் பொறுத்தது என்பதே என்னுடைய பதில்.இந்த வழிமுறைகள் நெடுநாட்களாக நம் மரபில் இருந்துகொண்டிருப்பவை. பல தளங்களில் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டவை. அவற்றை சமகாலத்தேவைக்காக சீர்ப்படுத்தி இந்த குரு அமைப்புகள் சீடர்கள் மூலம் கற்பிக்கின்றன. அவற்றை முறையாகக் கற்றுக்கொள்வதும் கடைப்பிடிப்பதும் கண்டிப்பாக உரிய விளைவுகளை அளிப்பதுதான்.
யோகம் என்பது உள்ளை அறிவது. இந்தவழிமுறைகளை applied yoga என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்நிலையிலேயே அவை ஒருவரைத் தன்னுடைய அகத்தைத் தானே காணவும் அதன் மீதான கட்டுப்பாட்டை அடையவும் உதவக்கூடும். அந்நிலையில் அவை உடல்சார்ந்த நோய்களைத் தீர்க்கமுடியும்.
தர்க்கபூர்வமான காரணம் இதுதான். இந்திய சிந்தனைமுறை உடலையும் மனத்தையும் பிரித்துப்பார்ப்பது அல்ல. உடல்மனம் என்ற ஒரே அமைப்பாகவே அது மனிதனைப் பார்க்கிறது. ஒரு மனித இருப்பை ஏழு அடுக்குகள் கொண்டதாக அது உருவகிக்கிறது. உடல் முதல் அடுக்கு மட்டுமே [அன்னமயகோசம்]. உயிர், மனம், ஆழ்மனம்,முழுமனம் எல்லாம் பிற அடுக்குகள். உடலின் சிக்கல் உள்ளத்தின் சிக்கலாகலாம். உள்ளத்தின் சிக்கல் உடலிலும் வெளிப்படலாம்.
                                                      
முழுமையான தீர்வை நோக்கிச்செல்லவே உடலையும் மனதையும் ஒன்றாகக் காணும் யோகத்தின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.அவற்றின் சில பயிற்சிகளே இங்கே சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. உடலை ஓர் இயந்திரமாக மட்டுமே கண்டு அளிக்கப்படும் சிகிழ்ச்சைகளால் குணப்படுத்தப்பட முடியாத பல சிக்கல்களை இந்த ஒருங்கிணைந்த முறை சரிசெய்திருப்பதை நான் அறிவேன். மீண்டும் சொல்லவேண்டியது இதுதான்.அது இம்முறையைக் கடைப்பிடிப்பவர்களின் கையிலேயே உள்ளது.
இங்கே இந்த வகையான குரு முறைமை உருவாகி வர மூன்று கூறுகள் தேவையாக உள்ளன. யோக வழிமுறைகளை அறிந்த ஒரு குரு, அவரை ஒரு பெரும் படிமமாக ஊடகங்கள் மூலம் முன்வைத்து உருவாக்கும் நம்பிக்கை, அவரைநாடி வரும் கோடிக்கணக்கானவர்களைக் கையாள்வதற்கான கார்ப்பரேட் அமைப்பு. இது இன்றுள்ள தேவையில் இருந்து உருவாகி வந்திருக்கிறது. இந்த தேவை முன்பெப்போதும் நம் பண்பாட்டில் இருந்ததில்லை என்பதனால் இவர்களைப் போன்றவர்கள் முன்பு இருந்ததில்லை.இந்தத் தேவை இருப்பதுவரை இவர்கள் இருப்பார்கள்.
இந்த யோகமுறைகள் நீங்கள் நினைப்பதுபோல வெறும் உடற்பயிற்சிகள் அல்ல. ஆகவே அவற்றைப் பாடத்திட்டமாக ஆக்கி இந்த குருக்களில் இருந்து பிரித்துக் கற்பிக்க முடியாது. இவை ஆழ்மனம் சம்பந்தமானவை.ஆகவே பெரும்பாலும் நம் ஆழத்துக்கனவுகளில் ஊடுருவக்கூடிய படிமங்கள் மூலம் செயல்படக்கூடியவை.அந்த குருவின் ஆளுமை, அந்த முத்திரைகள், அந்த ஒலிகள், அந்த ஆசாரங்கள் எல்லாமே நம் தர்க்கத்தைத் தாண்டி ஆழத்து அடுக்குகளை சென்றுசேரும் படிமங்கள்தான். அந்தப்படிமங்களை உருவாக்கி நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும் அமைப்புகளும் ஆசாரங்களும் இல்லையேல் அவற்றால் பயனில்லை.
ஆகவே உங்கள் முன் மூன்றுவழிகள் உள்ளன. நீங்கள் முழுமையாக ஞானத்தின் வழியைத் தேர்ந்தெடுக்கலாம். அங்கே நீங்கள் ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருக்கலாம். உங்கள் ஞானத்தேடல் அங்கே உங்களை வழிகாட்டி அழைத்துச்செல்லும். அல்லது நீங்கள் கர்மத்தின் பாதையை தேர்ந்தெடுக்கலாம். முழுமையான அர்ப்பணமும் பக்தியும் உங்களுக்குத் தேவையானவற்றை அளிக்கும். உங்களுக்கு என்ன நிகழ்கிறதென நீங்கள் அறிய வேண்டியதில்லை. அன்னை மடியில் குழந்தைபோல, மருத்துவனை நம்பும் நோயாளி போல இருக்கலாம்.
இல்லை, உங்களுக்கு லௌகீக வாழ்க்கையின் எல்லைக்குள் ஞானமார்க்கத்தின் குருவழிகாட்டல் தேவை என்றால், அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்திற்கு நடுவே யோகத்தின் நடைமுறைப்பயன்களில் சில தேவை என்றால் வேறு வழியே இல்லை. ‘சாமியார்களை மதிக்க மாட்டேன் என்பது கொள்கை’ என்பது போன்ற பாவலாக்களை நீங்கள் கைவிடுவதே நல்லது. மதிக்காமல் நீங்கள் அங்கே நீடித்திருக்க முடியாது. உங்கள் அகஆழம் அப்பயிற்சிகளுக்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கமுடியாது.

No comments:

Post a Comment