Monday 5 March 2012

குறுக்குவழி உதவாது!

நினைத்தவுடன் எல்லாம் நடக்க வேண்டும். நொடியில் சமையல் முடிய வேண்டும், மந்திரத்தில் மாங்காய் காய்க்க வேண்டும், குறுக்கு வழியிலாவது உடனடியாகப் பணக்காரர் ஆகவேண்டும் என்று அவசரகதியில் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இத்தகைய சூழலில், திபெத்தைச் சேர்ந்த புத்தமதத் துறவி மிலரேபாவைப் பற்றி அறிந்துகொள்வது பொருத்தமாகவும், பயனளிப்பதாகவும் அமையும்.
 மிலரேபா மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மிலரேபாவின் தந்தை இறந்தவுடன் அவரது சித்தப்பாவும், சித்தியும் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டனர். எனவே மிலரேபா தனது தாயின் வேண்டுகோளின்படி மாந்திரீகம் பயின்றார், அதன் மூலம் இயற்கைச் சீற்றத்தைத் தூண்டி சித்தப்பாவின் வீடு இடியும்படி செய்தார். அந்தச் சம்பவத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கவும் நேர்ந்தது. இவ்வாறு தனது இளமைக் காலத்தில் மிலரேபா தனது மாந்திரீகத்தின் மூலம் பல்வேறு தீயசெயல்களைச் செய்தார்.

                                                        



ஆனால் அவர் பக்குவமடைந்தபின் தனது இழிவான செயல்களுக்கு வருந்தி அமைதியைத் தேடி அலைந்தார். பழிக்குப் பழி என்பது தவறு என்பதை அவர் உணர்ந்தார். அவர் நாடிச் சென்ற குரு மார்பா, தன்னுடைய சீடர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அன்பாக இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக நடந்து கொள்வார். பார்ப்பதற்கு இது சற்று முரண்பாடாக தோன்றும். ஆனால் நன்மை விளைவிப்பதே மார்பாவின் நோக்கம்.

இவர் தன்னிடம் பயிலவந்த மிலரேபாவை பல அடுக்குகளைக் கொண்ட கோபுரங்களை மூன்றுமுறை கட்டச் சொன்னார். அதனால் விரக்தியின் எல்லைக்குச் சென்று விட்டார் மிலரேபா. குருவின் ஆசியையும், வழிகாட்டுதலையும் பெறமுடியவில்லையே என்று மனம் வருந்தினார். உடனே குரு மார்பாவின் துணைவியாரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று மற்றொரு குருவை நாடி தியானப் பயிற்சியை மேற்கொண்டார். ஆனால் அவரால் எந்தவித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை.
தான் முதலில் நாடிச் சென்ற குரு மார்பாவின் ஆசி இருந்தால்தான் தன்னால் அமைதிப் பயணத்தை தொடங்க முடியும் என்று மிலரேபா உளமார உணர்ந்தார்.

மீண்டும் தனது குரு மார்பாவிடம் சென்று 12 ஆண்டுகள் கடுமையாகப் பயிற்சி பெற்று 'வஜ்ரதாரா' என்று சொல்லப்படும் பரிபூரண நிலையை மிலரேபா அடைந்தார். மிலரேபாவின் குரு அவரிடம் கடுமையாக நடந்து கொண்டது அவரைப் புடம் போட்ட தங்கமாக மாற்றுவதற்குத்தான். தனது குரு பலமுறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டு வருத்தம் அடையவைத்த போதும் மிலரேபா குருவை ஒருபோதும் வெறுக்கவில்லை. இதை குரு மார்பாவும் நன்கு உணர்ந்திருந்தார்.

அதற்குக் காரணம், முன்னேற்றத்தின் பாதை என்பது ரோஜா மலர்கள் தூவியது கிடையாது. கல்லும், முள்ளும் நிறைந்த ஒன்றுதான். உன்னத நிலையை அடைவது என்பது சாதாரண முயற்சிகளின் விளைவாக இருக்க முடியாது. நெருப்பிலிட்டு உருக்கும்போதுதான் அணிகலன் என்ற கவுரவத்தைப் பெறுகிறது தங்கம்.

எந்தக் கல் தன்னைச் சிற்பி செதுக்கும்போது பொறுமையாக இருக்கிறதோ அதுவே சிலையாக உருவம் பெற்று, மக்கள் வழிபடும் பெருமை பெறுகிறது. பொறுமையில்லாமல் உடையும் கல், தேங்காய் உடைக்கத்தான் பயன்படும். மிலரேபா எப்படி மார்பாவின் ஆசியைப்பெற கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததோ அதையே அவரது சீடர்களும் செய்ய வேண்டும் என்பதே இயற்கையின் விதி.

கடுமையான சவால்களை எதிர்கொண்டாலே நிர்வாகத் திறனுக்கான மனப்பக்குவம் ஏற்படும் என்று ஹெட்பிட்ஸ், லாரி என்ற இரு வல்லுனர்கள் ஹார்வர்டு மேலாண்மை ஆய்வு இதழில் தெரிவிக்கிறார்கள்.

இளம்வயதிலேயே மேலாண்மைப் படிப்பை பயில்பவர்களை சவால்களை எதிர்கொள்ளும்படி பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தமது பணிக்களத்தில் வெற்றியாளர்களாக வலம்வருவது சாத்தியமாகும். இதை மனதில் கொண்டுதான் மேலாண்மைப் படிப்பைப் பயில அனுமதிக்க நேர்முகத்தேர்வு நடத்தும்போதும் சரி, எம்.பி.ஏ படிப்பை முடித்துப் பணிக்கு அமர்த்தத் தேர்வு செய்யும் போதும் சரி, மூத்த வல்லுனர்கள் கடினமான கேள்விகளை கேட்டு ஒவ்வொருவரின் திறமையையும் சோதிக்கிறார்கள். ஆன்மிக குருக்கள் வழி நடத்தும்போது அவர்களுக்குச் சரியான கேள்வியும் கேட்கத் தெரியும். சரியான பதிலும் தெரியும். ஆனால் மேலாண்மைத் துறையில் வழிநடத்தும் தலைவர்கள் எல்லோருக்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும் அவர்கள் சரியான கேள்விகளை கேட்கத் தெரிந்திருக்கிறார்கள்.


ஹெட்பிட்ஸும், லாரியும், சிறந்த தலைமைப் பண்புக்கு ஆறு அம்சங்கள் அவசியம் என்று கருதுகிறார்கள். தம்மைத் தாமே விட்டு விலகி, பால்கனியில் நின்று பார்ப்பது போல் சூழலை கவனிக்கும்போதுதான் சவால்களை இனங்கண்டு எதிர்கொள்ள தயாராக முடியும் என்கிறார்கள் இவர்கள். சவால்களை எதிர்கொள்ள ஏற்புடைய மாற்றம் தேவை என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் உணர்ச்சிவசப்படாமல் திட்டமிட்டுச் சரியான முடிவெடுத்துச் செயல்பட முடியும். குழப்பங்களைத் தவிர்த்து, பலரது கருத்துகளையும் கேட்டு கவனத்துடன் கூடிய ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களாக மேலாண்மை பண்புகளுடன் செயல்பட முடியும் என்கிறார்கள் மேற்கண்ட வல்லுநர்கள்.

மேலும் பொறுப்புகளையும், வேலைகளையும் சக பணியாளர்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களின் கருத்தே குழுத்தலைவரின் கருத்து என்ற நிலையை உருவாக்கும்போதுதான் சிறந்த நிர்வாகத் திறமை வெளிப்படும். இளைஞர்களுக்குக் கடுமையான பயிற்சி அளித்தால்தான் சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் அனுபவம் அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் ஹெர்பிட்ஸும் லாரியும் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

விலை மதிக்க முடியாத முத்து ஆழ்கடலில்தான் கிடைக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பூமிக்கடியில் புதையுண்டு கிடந்த நிலக்கரிதான் பக்குவமாகி, வைரமாகச் ஜொலிக்கிறது. வாழ்க்கையில் ஆன்மிகம் என்றாலும் சரி, உயர் நிலை, பதவிகளைப் பெற வேண்டுமென்றாலும் சரி, குறுக்கு வழி ஒரு போதும் உதவாது. திட்டமிட்டு, விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்கப் பழகிக் கொண்டால் எல்லோரும் தாம் எண்ணிய இலக்கை அடைவது சாத்தியமே.
 

No comments:

Post a Comment