Tuesday 13 March 2012

சமைக்கக் கற்றுக்கொள்கிறாள் மகள்

மைக்கக் கற்றுக்கொள்கிறாள் மகள்.
பிசிபிசுத்த பாத்திரங்கள் காத்திருக்கின்றன.
சமையலறை
பென்சில் டப்பாவைப் போல
ஏன் சின்னதாக இருக்கிறதென்கிறாள்.
தீப்பெட்டிகளைக் கையாண்டவர்கள்
ஏன் நனைந்துபோனார்கள் என்கிறாள்.
ஒட்டடை மிகுந்த அறைகளைவிட
கரி படிந்த சமையலறையில்
அம்மாவின் வாசனையிருப்பதைக் கண்டுபிடிக்கிறாள்.
சமையலறையில் வாழ்ந்தவர்களின்
பொருமல்கள் கடுகு டப்பாவிலிருக்கலாம்
கோபம் மிளகாய் டப்பாவிலிருக்கலாம்
தன் உடம்பை பிரஷர் குக்கராக்கி வாழ்ந்திருக்கிறார்கள்
எத்தனை தலைமுறைகளைச் சந்தித்திருக்கிறது சமையலறை.
மண் பாத்திரங்களாய்
எவர்சில்வர் பாத்திரங்களாய்
வெள்ளிப் பாத்திரங்களாய்
எல்லாம் மாறி
பிளாஸ்டிக் தலைமுறை வந்திருக்கிறது.
பாத்திரங்களைப் போல மனுஷிகளும்.
மகள் தேடிக்கொண்டிருக்கிறாள்
எந்த டப்பாவில் அம்மாவின் விரல்களிருன்தன 
எந்த டப்பாவில் அம்மாவின் கண்ணீ ரிருன்தது 
எந்தச் சமையல் செய்யும்போது அம்மா சிரித்திருப்பாள்
அம்மா, ஆயா, ஆயாவுக்கு ஆயா, கொள்ளுப்பாட்டிகளில்
யார் உப்பாகக் கரைந்துபோனார்கள்
யார் ஏலக்காய்போல வாசனை வீசினார்கள்
யார் கறிவேப்பிலைபோல வதந்கிப்போனார்கள்
எதைக் கற்றுக்கொள்ளப்போகிறாள் மகள்.
மீந்துபோன பருக்கைகளாய்
எத்தனை துயரங்கள்
மொழி அறியாத காக்கைகள் எடுத்துச் சென்றன.
கழிவு நீரோடு கலந்துபோன பெருமூச்சுகள் எத்தனை
எத்தனை கனவுகள் அடுப்புக்குள் எரிந்துபோயின.
மகள் இன்னும் அடுப்பைப் பற்றவைக்கவில்லை
புதிய தீக்குச்சிகள் இருக்கின்றன
சமையலறையை டைனோசரைப் போல
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
பழகிவிடும் டைனோசர் இன்னும் சில நாட்களில்!

கோசின்ரா 

No comments:

Post a Comment