Wednesday, 26 October 2011

சந்தோஷ் சிவன் புகைப்படங்கள்


 



                                                    

Tuesday, 25 October 2011

கலாப்பிரியா கவிதை

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

சுந்தர ராமசாமி கவிதைகள்


சவால்

நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.

வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பிதுங்கல்.

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.

எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.

நம்பிக்கை

 தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.


பூனைகள் பற்றி ஒரு குறிப்பு
 
பூனைகள் பால் குடிக்கும்.
திருடிக் குடிக்கும் கண்களை டிக்கொள்ளும் டிய கண்களால் சூரிய
அஸ்தமனம் ஆக்கிவிடும். மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன்
கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போதும் ரகசியம் சுமந்து வளைய வரும்
வெள்ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்கை கொண்டவை பெண்
பூனைகள் குட்டி போடும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ன்று அல்லது
நான்கு அல்லது குட்டிகளுக்ளு மியாவ் மியாவ் மியாவ் கத்தச் சொல்லித்
தரும். வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இரண்டு அடுக்குக்
கண்களில் காலத்தின் குரூரம் வழியும் பூனைகள் குறுக்கே
வராமலிருப்பது அவற்றுக்கும் நமக்கும் நல்லது. குறுக்கே தாண்டிய
பூனைகள் நெடுஞ்சாலைகளில் தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை
போல் ஒட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள் குறுக்கிட்டுத்
தாண்டும் சிறிய பூனைகள்தான் பெரிய பூனைகள் ஆகின்றன.
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின்
மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம் அவற்றின் பேறுகால
அனுபவங்கள் பற்றி நாம் யோசிப்பது காணாது இருப்பினும் அவை
இருக்கின்றன. பிறப்பிறப்பிற்கிடையே. 

இந்த வாழ்க்கை 

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்
என்ன பயன்?

என்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர
நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை
நான் அணைக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்னும் எனக்கு தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை

உறவு

உறவு அது அப்படித்தான்
கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்
அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்
மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்
காலடியில் அடிவானங்கள் குவியும்
அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்
துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து
பார்வைகள் திரியும்
கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து
மலக்கிடங்கில் விழுந்து சாகும்
மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி
வளைய வரத் தொடங்கும். 

Monday, 24 October 2011

நாம் குடிக்கும் நீரில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? தண்ணீர் குடிக்காமலே நம்மால் வாழ முடியுமா?

மனிதன் 65 சதவிகிதம் தண்ணீரால் ஆனவன். தண்ணீர் இல்லையேல் மனிதன் இல்லை. தக்காளியில் இருப்பது 95 சதவிகிதம் தண்ணீர்.
உலகிலேயே மிகச் சிறந்த தூய்மையான (மினரல்) தண்ணீர் என்று எடுத்துக்கொண்டால், அது பிரான்ஸ் நாட்டில் இருக்கும் Perrier என்கிற குடிநீரே! தூய்மையான தண்ணீரில் கால்ஷியம், மக்னீஷியம், இரும்பு போன்ற பல உண்டு. சத்துக்காக அல்ல; சுவைக்காக! அதெல்லாம் அகற்றப்பட்ட 'டிஸ்டில்டு வாட்ட'ரை வாயில் விட்டுக்கொண்டால், தண்ணீரின் சுவையே அதில் இருக்காது. ஒரு ஸ்பூன் அருந்தினால், அதைத் துப்பி விடுவீர்கள்.

தண்ணீர் இல்லாத உடல் சில நாட்களுக்குள் மரணத்தை நோக்கிச் சரிய ஆரம்பிக்கிறது. உதடுகளும், பற்களைத் தாங்கும் ஈறும் முழுமையாகக் கறுத்துப் போய் வெடித்துவிடுகின்றன. நாக்கு அடியோடு வறண்டு, மூக்குகூடச் சுருங்கித் தொங்கிவிடும். இமைகளை மூட முடியாது. பிறகு, டீஹைட்ரேஷன் ஏற்பட்டு, திடீரென்று சுருண்டு விழுந்து... மரணம்!

நம் நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு, அரபு நாடுகளைப் போல் தண்டனை கொடுத்தால் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும் என்று சிலர் சொல்கிறார்களே, சாத்தியமா?


நிறையப் படங்களோடு கூடிய Crime - punishment என்கிற புத்தகத்தில் நூற்றுக்கணக்கான தண்டனைகளை விவரித்திருக்கிறார்கள். அரபு நாட்டில் சில குற்றங்களுக்கு தலையைச் சீவுகிறார்கள். சிங்கப்பூரில் சவுக்கடி நடைமுறையில் உண்டு. யு.எஸ்-ஸில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தண்டனைகள் மாறும். நம் நாட்டில், நம்முடைய சட்டத்தைத்தான் பின்பற்ற முடியும். இப்போது மரண தண்டனைக்குப் பல நாடுகளில் எதிர்ப்பு இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். உதாரணமாக, பிறகு அவர் நிரபராதி என்று தெரியவந்தால்?!

சிரித்தாலும் கண்ணீர் வருகிறது, அழுதாலும் கண்ணீர் வருகிறது. இதன் மர்மம் என்ன?

பொதுவாக, விலங்குகள் அழுவது இல்லை. யானை, குதிரை மட்டும் அழுவதாகச் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதெல்லாம்கூட, மனிதக் கண்ணீருக்கு இணையானதா என்பது கேள்விக் குறி. பரிணாம வளர்ச்சியில் கண்ணீர், மனிதர்களுக்கு இடையில் ஒரு தொடர்பாகப் பயன்பட ஆரம்பித்தது (to communicate). கணவனும் மனைவியும் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது, மனைவி அழ ஆரம்பித்தால், உடனே வாதம் நின்றுபோகிறது. வார்த்தைகள் ஓரமாக ஒதுக்கப்படுகின்றன. தற்காப்புக்கான ஒரு இன்டர்வெல் மாதிரிதான். குழந்தை கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போது அழாமல் இருக்கலாம். அம்மா ஓடி வந்து வாரி அணைத்துக்கொள்ளும்போது அழத் தொடங்குகிறது. அழுகை பிடிக்காத ஓர் ஆராய்ச்சியாளர் கண்ணீர் விடுவதை 'eye pissing’ என்கிறார். ஆனால், அழுகைமனசை லேசாக்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில், நாம் எப்போதுமேஅழுதுகொண்டு தான் இருக்கிறோம். அதாவது, ஒவ்வொரு முறை இமை மூடித் திறக்கும்போதும், கண்ணின் ஓரமாக இருக்கும் லாக்ரிமல் சுரப்பிகள் லேசாக அழுத்தப்பட்டு, கண்ணீர் சுரக்கிறது - கண்களை ஈரமாக வைக்க.
கண்ணீரில் கிருமிநாசினிகள் (antibacterials) உண்டு. இந்த எல்லாவற்றையும் இயக்கும் 'பரம் பொருள்’ மூளையே. வலியால், எரிச்சலால் ஏற் படும் கண்ணீருக்கும், உணர்ச்சி மேலிட்டு அழுவ தற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டாவதால் ஏற் படும் கண்ணீரில், மாங்கனீஸ் மற்றும் புரோட்டீன் அதிகம் இருக்கும். அதாவது, கண்ணீரை 'லேப்’பில் சோதித்து, ஏன் அழுதார் என்று கண்டு பிடித்துவிடலாம்!

ஒரு செயலைச் செய்து முடிக்கத் தேவை... விடாமுயற்சியா, கடவுள் அருளா?  

விடாமுயற்சியுடன் உழைத்து ஒரு செயலை முடிக்க, கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்!

பிறப்பைத் தீர்மானித்த இறைவன், இறப்பின் ரகசியத்தை மறைத்தது ஏன்? 

நீங்கள் எப்போது பிறக்கிறீர்கள்?
'வெளியே வரும்போதுதான்’ என்றா நினைக்கிறீர்கள்? அல்லது கருவாக உருவாகும்போதா? அல்லது அப்பாவிடம் பாதியாகவும் அம்மாவிடம் பாதியாகவும் இருந்தபோதா? பிறப்புக்கு முன்னும் ரகசியம்தான். இறந்த பின்னும் ரகசியம் தான். இந்த இரண்டு ரகசியங்களும் தெரிந்துவிட்டால், நாம் மன நோயாளியாக ஆகி, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்ட காலத்தை அனுபவிக்காமல் போய்விடுவோம். வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இந்த இரண்டு ரகசியங்களையும் மறைத்துவைத்துவிட்டான்!
 
  

Thursday, 20 October 2011

சில கவிதைகள்

கடவுளை நேசித்தல் 

டவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.
பயம், துக்கம், நோய், விபத்து
பயணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவருடைய பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.
அவமானம், நிராசையின்போது
அவரை நிந்தித்திருக்கிறேன்.
ஆசைகள் பலிக்க
உண்டியலில் காசு போட்டு
டீல் பேசி வியாபாரியாக்கி
இருக்கிறேன் அவரை.
நாள் கிழமையில்
அவர் பேர் சொல்லி
விதவிதமாய்
உண்டிருக்கிறேன்.
ஒரு படத்துக்குள் அடைத்து
வீட்டில் வைத்தவுடன்
அவர் அதில் மட்டும் இருப்பதாக
நம்பி இருக்கிறேன்.
அவர் தந்ததை
அவருக்கே படைத்து
நான் செலுத்தியது எனப்
பெருமையுற்றிருக்கிறேன்.
எனக்குத் தந்தது
போதும் என நினைத்து
எப்போதாவது அவர் எனக்கு
வஞ்சகம் செய்திருப்பாரோ எனச்
சந்தேகப்பட்டிருக்கிறேன்.
என்னை முன்னேறவிடாமல்
தடுத்ததுபோல் திட்டி இருக்கிறேன்.
என்னை எப்போது உயர்த்துவாய் என
எந்நேரமும் கேட்டபடி இருக்கிறேன்.
என்னை யாராவது
காயப்படுத்தும்போது
கேட்க மாட்டாயா நீ எனக்
கத்தித் தீர்த்திருக்கிறேன்.
கடவுளை ஒருக்காலும்
நான் நேசித்ததே இல்லை என்ற
உண்மையை உணரும்போது
சங்கடமாக இருக்கிறது
அவராவது என்னை
நேசித்திருப்பாரா என்று.
- தேனம்மை லெட்சுமணன் 

ரயில் - சில சித்திரங்கள்   



காடுமேடெல்லாம்
தறிகெட்டு ஓடினாலும்
அறிவிக்கப்பட்ட
நடைமேடையில்
இடுப்பை மெதுவாய்
வளைத்து நெளித்து
காத்திருப்போரின்
கால்களை எல்லாம்
நக்கியபடி வந்து நிற்கும் ரயில்
ஆக சாந்தமான ஒரு
வளர்ப்புப் பிராணி
என்பதை அறிக.
 'எப்போ கார் வாங்கப்
போறீங்க?’ பின் சீட்டிலிருந்து
மனைவி கேட்கிறாள்.
டூ வீலர் லோனுக்கான தவணை
எப்போது முடியும் என்பதை
யோசித்துக்கொண்டிருக்கிறேன் நான்.
'ரயில் வாங்கலாம்பா’ என்கிறான்
பெட்ரோல் டேங்கில்
உட்கார்ந்திருக்கும்
என் பிள்ளை.
அன்றாடம் பார்க்கும்
ரயில்தான் என்றாலும்
ஆற்றில்
துவைத்துக்கொண்டிருப்பவர்கள்
அண்ணாந்து பார்க்கவே செய்கிறார்கள்
பாலத்தில் போகும் ரயிலை.
- எஸ்.பாபு

காட்சி


காட்சி ஆரம்பித்தது
கதை நாயகி குளித்துக்கொண்டிருந்தாள்
வில்லன் அதை
விஷமத்தனமாகப்
பார்த்துக்கொண்டிருந்தான்
'உன் அக்கா தங்கச்சிய
இப்படிப் பாப்பியடா...’
வசனம் பேசி
சண்டையிட்டான் கதை நாயகன்
நாயகனுக்கு நன்றி சொல்லிவிட்டு
குளிக்க ஆரம்பித்தாள் நாயகி
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்!
ஆ.கீதம் லெனின்  

மறைவிடம்

தோட்டத்தில்
சிறுவர்கள் அனைவரும்
ஒளிந்து விளையாடினர்
ஒவ்வொருவரும்
ஒரு மறைவிடம் தேடி ஒளிந்தார்கள்,
மறைவிடம் கிட்டாத சிறுமி மட்டும்
மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டாள்
சிறுமிக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டது மரம்!
 

Wednesday, 19 October 2011

Rabindranath Tagore Poems


Endless Time
Time is endless in thy hands, my lord.
There is none to count thy minutes.

Days and nights pass and ages bloom and fade like flowers.
Thou knowest how to wait.

Thy centuries follow each other perfecting a small wild flower.

We have no time to lose,
and having no time we must scramble for a chance.
We are too poor to be late.

And thus it is that time goes by
while I give it to every querulous man who claims it,
and thine altar is empty of all offerings to the last.

At the end of the day I hasten in fear lest 

thy gate be shut;
but I find that yet there is time. 

Benediction
Bless this little heart, this white soul that has won the kiss of
heaven for our earth.
He loves the light of the sun, he loves the sight of his
mother's face.
He has not learned to despise the dust, and to hanker after
gold.
Clasp him to your heart and bless him.
He has come into this land of an hundred cross-roads.
I know not how he chose you from the crowd, came to your door,
and grasped you hand to ask his way.
He will follow you, laughing the talking, and not a doubt in
his heart.
Keep his trust, lead him straight and bless him.
Lay your hand on his head, and pray that though the waves
underneath grow threatening, yet the breath from above may come and
fill his sails and waft him to the heaven of peace.
Forget him not in your hurry, let him come to your heart and
bless him. 

When I Go Alone At Night

WHEN I go alone at night to my love-tryst, birds do not sing, the wind does not stir, the houses on both      sides of the street stand silent.
 
 It is my own anklets that grow loud at every step and I am ashamed.

When I sit on my balcony and listen for his footsteps, leaves do not rustle on the trees, and the water is still in the river like the sword on the knees of a sentry fallen asleep.

 It is my own heart that beats wildly -- I do not know how to quiet it.

When my love comes and sits by my side, when my body trembles and my eyelids droop, the night darkens, the wind blows out the lamp, and the clouds draw veils over the stars.

It is the jewel at my own breast that shines and gives light. I do not know how to hide it. 

The Journey

The morning sea of silence broke into ripples of bird songs;
and the flowers were all merry by the roadside;
and the wealth of gold was scattered through the rift of the clouds
while we busily went on our way and paid no heed.

We sang no glad songs nor played;
we went not to the village for barter;
we spoke not a word nor smiled;
we lingered not on the way.
We quickened our pace more and more as the time sped by.

The sun rose to the mid sky and doves cooed in the shade.
Withered leaves danced and whirled in the hot air of noon.
The shepherd boy drowsed and dreamed in the shadow of the banyan tree,
and I laid myself down by the water
and stretched my tired limbs on the grass.

My companions laughed at me in scorn;
they held their heads high and hurried on;
they never looked back nor rested;
they vanished in the distant blue haze. 

Give Me Strength

This is my prayer to thee, my lord---strike,
strike at the root of penury in my heart.

Give me the strength lightly to bear my joys and sorrows.

Give me the strength to make my love fruitful in service.

Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.

Give me the strength to raise my mind high above daily trifles.

And give me the strength to surrender my strength to thy will with love.
 

 

Monday, 17 October 2011

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல, இயற்பியலே!-ஸ்டீபன் ஹாக்கிங்



இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது.

பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார்.இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக தனது சமீபத்திய 'தி கிரான்ட் டிசைன்' (The Grand Design) என்ற நூலில் எழுதியுள்ளார் ஹாக்கிங்.

இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே.சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.


பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து 'ஏ பிரபஞ்சமே உருவாகு' என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.அதேசமயம், 1998ல் ஹாக்கிங் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' நூலில், பூமியின் உருவாக்கலில் கடவுளுக்கும் பங்கு இருக்கலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார் ஹாக்கிங்.

ஆனால் தற்போது முற்றிலும் இது இயற்பியல் சார்ந்த நிகழ்வு என்று அடித்துக் கூறியுள்ளார் ஹாக்கிங். தனது புதிய புத்தகத்தில் அவர் கூறுகையில், பிக் பாங் காரணமாக சூரிய குடும்பமும், கோள்களும் உருவாகின. பூமியும் உருவானது. இதற்குக் காரணம், இயற்பியலின் விதிகளால் ஏற்பட்ட விளைவுகளே. இங்கு கடவுளுக்கு எங்குமே இடமில்லை. முற்றிலும் அறிவியல் சார்ந்த நிகழ்வு இது.என் முன் இரண்டு கேள்விளை வைக்கிறேன். முதல் கேள்வி, நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினாரா என்பது.2வது கேள்வி, அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரபஞ்சம் உருவானதா என்பது. இதில் நான் 2வது கேள்வியையே ஆதரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியலின் கோட்பாடுகளை 'கடவுள்' என்று கூறிக் கொள்ளலாம். அதேசயம் இதைத் தவிர வேறு எந்த கடவுளும் பிரபஞ்சத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து என்கிறார் ஹாக்கிங்.

இருப்பினும் பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக பிளாக் ஹோல்கள். இந்த 'இருண்ட சக்தி' பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதா அல்லது பிரபஞ்சம் உருவானபோது அழிந்து போனதின் மிச்சமா என்பது இதுவரை விளங்கவில்லை.தற்போதைக்கு பிரபஞ்சத்தின் வரலாறு குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே முடிவு பிக் பாங் தியரி மட்டுமே. மிகப் பெரிய வெடிப்புப் பிரளயத்தைத் தொடர்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக இந்த பிக் பாங் தியரி கூறுகிறது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்ததாக கடந்த ஆண்டு கணித்துக் கூறப்பட்டது.தற்போது வெளியாகியிருக்கும் ஹாக்கிங்கின் நூலும் பிரபஞ்ச வரலாறு குறித்த புதிய பார்வைக்கு வித்திடும் என்கிறார்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் லியோனார்ட் லோடினோவுடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார் ஹாக்கிங்

ஜென் தத்துவங்கள்

காலம்
யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.

சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

அறியாமை
அறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.

நான்
'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.

மௌனம் 
மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.

காலம் 
காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.

பெருமை 
பெருமை கொள்ளாதே
பௌர்ணமியின் முழுமையும்
ஓர் இரவுக்குத்தான் 









Sunday, 16 October 2011



ரூபம் - சிறுகதை

வன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது.
இவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.

இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.

பக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை.
கடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.
தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான்.
பள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள்   தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான்.
பல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.
இவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச்  சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான்.

நகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.
இவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.
ஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.
புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்பாளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.
வழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்.
இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும்.
சமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ‘ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா” என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான்.
அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைகளில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.
முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.
நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.
படகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் ” அய்யா நாங்கள் பொது மக்கள்” எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.
தகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. “கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்” என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.
தரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.
அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.
இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாயிருந்தான். அதற்காக இராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கிருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என இராணுவ அதிகாரி சொன்னான்.


இவர்களில் தெரிவு செய்யப்பட்ட அய்ம்பது பேர்களிற்கு பயிற்சியளிக்க ஒரு மனநல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இவன் குறுக்கிட்டு “இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’” என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக்கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார் போலிருந்தது. அடுத்த பயிற்சி வகுப்பை இராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால் முன்னாள் போராளிகளிற்கான முதல்நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.
சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கிருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனுமிருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்திருந்தவர்கள் மட்டுமேயிருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்திப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.
அக்காவுக்கு கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா அக்காவுடனேயே தங்கியிருந்தார். அம்மா தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால் அம்மா இவனைக் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வீடு உருக்குலைந்திருந்தது. கதவுகளையும் நிலைகளையும் கூடத் திருடிச் சென்றிருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னல்களிற்கும் அம்மா துணியால் திரை செய்து போட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும் நாற்காலியும் படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.
கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’ இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை இராணுவத்தினர் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப் போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டிருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.
அம்மா இவனுக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன், அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது அறைக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக் கூடுமென்பதால் இவன் வெறுமனே அறைக்குள் அடைந்து கிடந்தான். வாரம் ஒருமுறை இராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.
அன்று மாலையில் பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக் கொள்வதே என மனநல மருத்துவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பொழுது பட்டதும் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது உள்ளேயிருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீரென நிறுத்தப்பட்டது.
வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவறே அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படியிறங்கும் போது வீட்டுக்காரர் ‘கானகன் நீ இஞ்ச வந்து போனால் ஆமியால எங்களுக்கும் பிரச்சினை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
வீதியில் நின்று சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக் கொண்டிருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்ற வைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமிலிருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.
வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பீடியை இழுத்துக் கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும் அக்காவோ அத்தானோ தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீரென இவனுக்கு உறைத்தது.
நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டிருப்பது அவருக்கு நிம்மதியாகயிருக்கும்.
அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கையிருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது படுக்கை காலியாயிருந்தது. அம்மா பதற்றத்துடன் அறையின் மூலையொன்றிற்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அம்மா அவனது முகத்திற்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா திடீரென வெடித்துப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.


Thursday, 13 October 2011


மரணத்தின் ஆடை

நான் முதன்முறையாக
தூக்கிட்டுக்கொள்ள முயற்சித்த துணியை
இப்போதும் வைத்திருக்கிறேன்

மகத்தான அன்பின்
மகத்துவமுள்ள ஒரு பரிசினைப்போல.
வேறெந்த அன்பின் பரிசும்
இவ்வளவு வெதுவெதுப்புடன்
என்னிடம் தங்கியிருக்கவில்லை
இவ்வளவு ஆழமாக
என்னுடன் பிணைக்கப்பட்டிருக்கவில்லை

அதை நான் தேர்வு செயதது
அதன் ஆழ்நீல வர்ணத்திற்காக மட்டுமே
நீலம்
அது மரணத்தின் தூய வண்னம்
அதில்
துக்கமோ பயமோ இல்லை
நான் இந்த நீலக் கடலின் முன்
நின்றுகொண்டிருப்பதுபோல
நான் இந்த நீல ஆகாயத்தின் முன்
நின்று கொண்டிருப்பதுபோல
அந்த நீலத் துணியோடு
அந்த தனியறையில் நின்றுகொண்டிருந்தேன்

மேலும்
நான் அதைத் தேர்வு செய்தது
அதன் மிருதுவான தன்மைக்காக மட்டுமே
நான் அவ்வளவு மிருதுவான மரணத்தை
விரும்புகிறேனா என்று வியப்பாக இருக்கிறது
அவ்வளவு மெல்லியது அது
இதோ இப்போது மடித்து வைத்திருக்கிறேனே
அதே போல ஒரு சிறிய கைப்பையில்
அதை நான் வைத்திருந்தேன்
அது என்னைத் துன்புறுத்தவே இல்லை
கொஞ்சம்கூட மரண பயத்தை ஏற்படுத்தவில்லை
ஒரு குழந்தையின் அணைப்பைப்போல
ஒரு குளிர்ந்த காற்று
நம்மைக் கடந்து செல்வதுபோல
அவ்வளவு மிருதுவான ஒன்று
ஒரு கணத்தில் திடமானதாக மாறிவிடுகிறது
நீங்கள் உங்கள் வாழ்வில்
வேறெதுவும் இவ்வளவு விரைவாக
மாறுதலடைவதைப் பார்த்திருக்க மாட்டீர்கள்
அது தொண்டையின் முடிச்சுகளை அழுத்தும்போது
நீங்கள் காற்றுக்காக ஏங்கித் தவிக்கும்போது
பற்றிக்கொள்ள எதுவுமே இல்லாமல்
அந்தரத்தில் போராடும்போது
அதன் எடை எல்லையற்றதாக மாறிவிடுகிறது
நமது எடையையும்
எல்லையற்றதாக மாற்றிவிடுகிறது
நான் அப்போதும்
அது எவ்வளவு மிருதுவானது என்பதை
ஒரு கணம் நினைக்கவே செய்கிறேன்

அது என்னைக் கைவிட்டது
பாதிப் புணர்ச்சியில் கைவிடப்படுவதுபோல
எனக்கு அன்று கடுமையாகத் தலைவலித்தது
பாதிக் கனவில் விழித்தெழுவதுபோல
எனக்கு அன்று ஒரு மிடறு தண்ணீர்
தேவையாக இருந்தது
பாதிப் பயணத்தில் திருப்பி அனுப்பப்படுவதுபோல
எனக்கு அன்று எங்கே போவது என்று தெரியவில்லை
பாதி வதையும் பாதி கருணையுமுள்ள
வாழ்விற்கு மீண்டும் ஒரு முறை திரும்பி
என் நீலத் துணியால் முகத்தை
மூடிக்கொண்டு அழுதேன்
முதன் முறையாக
தூக்கிட்டுக்கொள்ள முயற்சித்த துணியை
எல்லா மகிழ்ச்சியான தருணங்களிலும்
நான் அணிந்துகொண்டிருக்கிறேன்
ஒரு ஆல்பத்தைக் காட்டுவதுபோல
என் நண்பர்களுக்கு அதைக் காட்டுகிறேன்
ஒரு ரகசிய ஆயுதத்தை எடுத்துப் பார்ப்பதுபோல
தூங்க முடியாத பின்னிரவுகளில்
எடுத்துப் பார்க்கிறேன்
ஒரு உடலின் வாசனையை
அந்தத் துணியில் மறைத்து வைக்கிறேன்

அன்பே
உனக்குத் தெரியுமா
இன்று நான் உன்னை சந்திக்கவரும்போது
அந்தத் துணியால்தான்
என் முகத்தை மூடிக்கொண்டு
இங்கே வந்தேன்



பரஸ்பரம்

பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்கு புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்

கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்


தேடல்

தவறாக அழைக்கப்பட்ட
தொலைபேசி எண்ணின்
மறுமுனையிலிருந்து
யாரோ ஒரு  குழந்தை
அப்பா நீ எங்கேயிருக்கிறாய்
என திரும்பத் திரும்ப
கேட்டுக் கொண்டேயிருக்கிறது


நான்
அதன் அப்பா இல்லை
என சொல்லி முடிப்பதற்குள்
என் வீடுவரை
தேடி வந்துவிட்டது



தலைவிரி கோலம்


இப்படித்தான்
அமர்ந்திருந்தாள்
அசோகவனத்திலும் ஒருத்தி

இடமுலை திருகி
எரியூட்டியவளுக்கும்
இதுதான் முகம்

துகில் உரிந்த சபையில்
துடித்தெழுந்தவளின்
தோற்றமும் இப்படித்தான் இருந்தது

கதறக் கதற சிசுக்களைக்
கிணற்றடிக்கு இழுத்து வந்தவளும்
வேறெப்படியும் இருக்கவில்லை

ஆணின் துயரத்தை
எத்தனை வார்த்தை சொன்னாலும்
அது துயரம் போலவே இருப்பதில்லை

உனக்கோ
இருக்கவே இருக்கிறது
எப்போதும்
இந்தத் தலைவிரி கோலம்