Thursday 13 October 2011



முழு நிலவு நாளில்

எனக்குத் தெரியாது
இன்றைக்கு
முழு நிலவு நாளென்று
அந்தியின் கண்ணீரை
துடைத்துக்கொண்டு
வேகவேகமாக
வீடு நோக்கி நடக்கிறேன்
எனக்கு முன்னே நடக்கிறது
என் பைத்திய நிழல்.

அந்தப் பக்கம்

நான் அந்தப் பக்கம்
போக வேண்டும்
இந்தச் சாலையைக் கடக்க
யாராவது கொஞ்சம் உதவுங்கள்

வேறு எந்த நோக்கத்திற்காகவும்
அல்ல
வெறுமனே நான்
அந்தப்பக்கம்  போகிறேன்
யாராவது கொஞ்சம் உதவுங்கள்
ஒரு சிறிய அன்பைக் கடக்க
ஒரு சிறிய பழக்கத்தைக் கடக்க
ஒரு சிறிய அறையைக் கடக்க
அடைவதற்கு
அந்தப் பக்கம்
ஒன்றுமே இல்லை என்று
எனக்கும் தெரியும்
ஆயினும்
இந்தப் பக்கத்தை
இழப்பதற்காகவாவது
நான் கொஞ்சம்
அந்தப்பக்கம்
போகத்தான் வேண்டும்

மறுபடியும்

அடுத்த வருடமும்
இதே நாளில்
இதே இடத்தில்
இதே பின் புலத்தில்
இதே போல
நாம் ஒரு புகைப்படம்
எடுத்துக் கொள்வோமா?
நிச்சயம் எடுத்துக் கொள்வோம்
ஆனால்
கொஞ்சம் வேறு சாயல்களுடன்
கொஞ்சம் வேறு ரகசியங்களுடன்

ஏதேனும் ஒரு நாளை



எதைப் பற்றியும் யோசிக்காமல்
எங்கிருந்தாவது தொடங்கவேண்டும்
ஏதேனும் ஒரு நாளை

இன்றைக்கு எந்த உறையிலிருந்து
எந்த வாளை எடுக்கலாம் என்று
திட்டமிடாமல்

கிளம்ப வேண்டிய நேரத்தைப் பற்றிய
பதட்டத்துடனேயே
கண் விழிக்காமல்

நேர் வழிகளையும்
குறுக்கு வழிகளையும் பற்றிக்
குழம்பாமல்

யாரையோ சமாதானப்படுத்த
என்ன செய்யலாம்
என்று யோசிக்காமல்

இதே போலத்தானே
முன்பொரு நாளும் விடிந்தது
என்று சஞ்சலமடையாமல்

கைமறந்து வைத்த பொருள்களை
நினைவுபடுத்திக் கொள்ளாமல்

இந்த நாளை எப்படிக் கடப்பது
என்று யோசிக்காமல்

இது ஒரு நல்ல நாளாக இருக்கும்
என்று நம்பிக்கை வைக்காமல்

கொடுத்த கடன்களையோ
வாங்கிய கடன்களையோ
புரட்டிப் பார்க்காமல்

தலையிலோ
அடிவயிற்றிலோ
வலி இல்லாமல்

முதல் காபியைப் பற்றி
புகார்கள் இல்லாமல்

பைத்தியங்களையும்
தாழ்வுணர்ச்சி கொண்டவர்களையும்
எப்படி சமாளிப்பது என்று
பதட்டமடையாமல்

சம்பிரதாயமான
காலை வணக்கங்கள் சொல்லாமல்

இன்றைக்கு ஏன்
ஒரு விடுமுறை தினமாக
இருக்கக்கூடாது என்று ஏங்காமல்

ஏதேனும்
ஒரு ரகசிய
சந்திப்பைத் திட்டமிடாமல்

நேற்று நமக்கு
அளிக்கப்பட்டதைப் பற்றியோ
மறுக்கப்பட்டதைப் பற்றியோ
நினைத்துக் கொள்ளாமல்

நமக்கு அருகே
தூங்கும் ஒருவரின் முகத்தைப்
பார்க்க வேண்டியிராமல்

அதிகாலையில் காணும்
கனவுகளுக்கு
அர்த்தங்கள் தேடாமல்

இன்றைக்கு
என்ன கிழமை
என்று யோசிக்காமல்

செய்தித்தாளின் தலைப்புகளோடு
நம்மைப் பிணைத்துக் கொள்ளாமல்

குடிகாரனாக இருப்பதைப் பற்றி
துக்கங்கள் இல்லாமல்

இன்றைக்கு எங்கே போகலாம்
என்று இலக்கற்று நினைக்காமல்

நம் அழிவை விரும்புபவர்களுக்குப்
பயப்படாமல்

ஏதோ ஒரு அவமானத்தை
ஏதோ ஒரு இழிவை
நம் முதல் நினைவாகக்
கொள்ளாமல்

யாரோ ஒருவர்
இன்று இல்லை என்பதை
மனம் கசிய நினைக்காமல்

நேற்று சொல்லத் தவறியவற்றை
இன்று நமக்கு நாமே
சொல்லிப் பார்த்துக் கொள்ளாமல்

நம் வாழ்க்கையை
மாற்றியமைத்துக் கொள்வதுபற்றி
வீண் கனவுகள் காணாமல்

நாம் யார் என்று
மீண்டும் ஒருமுறை
நம்மையே அபத்தமாகக் கேட்டுக் கொள்ளாமல்

எங்கிருந்து தொடங்குவது
என்று திகைக்காமல்

எங்கிருந்தாவது தொடங்கவேண்டும்
கண் விழிக்கும் எறும்புகளோடு சேர்ந்து
ஏதேனும் ஒரு நாளை


உயிரின் வாசனை



ஒரு பட்டுப்போன செடியைத்தான்
அதன் மண்ணிலிருந்து பிடுங்குகிறேன்
அதன் வேரிலிருந்து கிளம்புகிறது
உயிரின் மாசற்ற ஆதி  வாசனை

வாடிய செடிகளுக்கு
நீரூற்றுவதைவிட
கருணை மிக்கது
பற்றிக்கொண்டிருக்கும் நிலத்திலிருந்து
அதைப் பலவந்தமாகப் பிடுங்குவது

செடிகளில் பூக்கும் மலர்களில்
ஒன்றில் கூட
அவ்வளவு நறுமணம் இல்லை
பறித்தெடுக்கப்படும்
ஒரு  வேர் தரும் கிளர்ச்சி போல
 
 
 
 
 

 

No comments:

Post a Comment