Thursday 13 October 2011



இருளில் குழந்தைகள்

குழந்தைகள்
விளையாடிக்கொண்டிருக்கும்போதே
இருள் வந்துவிட்டதை
கவனிக்கவில்லை

சட்டென திரும்பிப் பார்த்து
இருளைக் கண்டு வியக்கிறார்கள்
அது அவர்களுக்கு
அவ்வளவு அருகில்
நின்றுகொண்டிருந்தது
மிகவும் உயரமாக இருந்தது
கனத்து தெரிந்தது
குழந்தைகள் தொட்டுப் பார்க்கிறார்கள்
அது அவர்கள் கையில் ஒட்டுகிறது
மௌனமாக
அங்கேயே இருக்கிறது

பயத்துடன் வீடு திரும்பும்
குழந்தைகளுடன்
கூடவே நடந்து வரும் இருள்
அவர்கள் வீட்டிற்குள் போவதை
வாசலிலேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறது
அப்படி ஒரு ஏக்கத்துடன்
எப்போது விடியும் என்று


உற்றுப் பார்க்காதே

எதையும் உற்றுப் பார்க்காதே
நம் கண்களின் வெப்பம்
மலர்களை வாடச் செய்துவிடுகிறது
நம் கண்களின் இருட்டு
பிரகாசமான இடங்களை இருள வைக்கிறது
நம் கண்களின் ஊடுருவல்
யாரோ ஒருவரை
நிர்வாணத்தில் நடுங்கச் செய்கிறது
நம் கண்களின் தந்திரம்
நமது நோக்கங்களை வெளிப்படுத்துகிறது
நம் கண்களின் தீமை
குழந்தைகளை நோய்மையுறச் செய்கிறது
நம் கண்களின் வேட்கை
ஒரு புழுவினைப்போல ஊர்ந்து செல்கிறது
நம் கண்களின் சந்தேகம்
எதையும் அதனிடத்தில் பார்க்க மறுக்கிறது
நம் கண்களின் பதட்டம்
தொட்டியிலிருக்கும் மீன்களை
அமைதியிழக்க வைக்கிறது

எதையும் உற்றுப் பார்க்காதே
நம் கண்களின் பயம்
எல்லோரையுமே பயப்பட வைக்கிறது



துணை

அத்துவான வேளையில்
இந்த வயல் வெளியெங்கும்
கண்ணுக் கெட்டிய தூரம்
யாருமே இல்லை

இரண்டு தென்னை மரங்களுக்கு
நடுவே காய்ந்துகொண்டிருக்கிறது
ஒரு ஈரப் புடவை

அத்துவான வேளையில்
இந்த வயல் வெளியெங்கும்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
யாருமே இல்லை


பார்க்கும் மனிதன்

எப்போதோ பிரிந்துபோனவனை
மறுபடி சந்திக்கையில்
எனக்குப் பேச ஒன்றுமே இல்லை
அவனது தலையில்
புதிய நரைகளைப் பார்த்தேன்
தவிர
கண்ணாடி அணிந்திருப்பதை
வேறுவிதமான சட்டைகள் அணிவதை
சற்றே பருத்திருப்பதை அல்லது மெலிந்திருப்பதை
விரலில் ஒரு வெட்டுக் காயம் இருப்பதை
நாற்காலியில் அமரும் விதத்தை மாற்றிக்கொண்டிருப்பதை
கண்களுக்கு கீழே படர்ந்திருக்கும் கருவளையத்தை
அடிக்கடி உச்சரிக்கும் ஒரு சொல்லை
புன்னகையில் ஒரு உலர்ந்த தன்மை ஏறியிருப்பதை
கழுத்தில் இருக்கும் சங்கிலியில் தொங்கும் டாலரை

ஏன் இதையெல்லாம் பார்க்கிறேன்
அவனைப் பற்றி அறியக்கூடிய ரகசியம்
இது மட்டுமே என்பதாலா
ஒரு உடலாக மட்டுமே
மனிதர்கள் திரும்புகிறார்கள்
என்பதாலா
மேலும்
பிரிந்துபோவதற்குமுன்பு
அவனை ஒரு நாள் கூட
ஒருமுறைகூட
இப்படி கவனித்த நினைவே இல்லை



  
 
தப்பிப்பு
 புணர்ச்சி முடிந்து
கண்கள் சந்தித்துக் கொள்ளாமல்
தூங்கிப் போனார்கள்


தூய வடிவில்
 
இந்தப் பகல் முழுக்க
பசி என்ற
ஒரே ஒரு உணர்ச்சிதான்
என்னை ஆள்கிறது

இந்த இரவு முழுக்க
காமம் என்ற
ஒரே ஒரு உணர்ச்சிதான்
என்னை ஆள்கிறது

எந்தக் குழப்பமும் இல்லை
எனது தூய வடிவில்
இருக்கிறேன்


  
 

No comments:

Post a Comment