Monday 3 October 2011

இன்றைக்கும் இருக்கும் காந்தி

காந்தி சொன்னது: என் வாழ்க்கையே என் செய்தி. அனேகமாகக் காந்தியின் சமகாலத்தவர்களான யாராலும் 'என் வாழ்க்கையே என் செய்தி' என்று சொல்ல முடியவில்லை. சர்ச்சிலால் முடியவில்லை. ரூஸ்வெல்டால் இயலவில்லை. என் வாழ்க்கையே என் செய்தி எனச் சொல்ல ஸ்டாலினுக்குக் கண்டிப்பாகச் சாத்தியமில்லை. இது ஒரு விசித்திரமான விஷயம். நம் காலத்தின் பெருந்தலைவர்களில் யாருடைய சுயசரிதை முக்கியமானதும் அர்த்தமுள்ளதும் என்றால் அது காந்தியின் சுயசரிதைதான்.

அவர் வாழ்க்கையே ஒரு முன்மாதிரி. இது மற்றவர்கள் விஷயத்தில் உண்மையல்ல. நம் விஷயத்தில் உண்மையல்ல. நம் வாழ்க்கையே வேறு. நாம் சொல்வதே வேறு. அறிவுஜீவிகள் என நினைத்துக்கொண்டிருக்கும் நாமோ 'அறிவுஜீவி சுதந்திரம்' பெற்றுவிடுகிறோம். அது தவறு எனச் சொல்ல வில்லை. அந்தச் சுதந்திரம் இல்லாவிட்டால் சிந்தனைக்கு வாய்ப்பே இல்லை. பர்மிங்ஹாமில் மார்ட்டின் க்ரீன் என்று எனக்கு நண்பர் ஒருவர் இருக்கிறார். நான் அவருக்குச் சீடனாக இருந்தேன்.
காந்தியைப் பற்றி நான் அவரோடு விவாதித்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு, அவர் மிகப் பெரிய ஞானியாகிக் காந்தி அன்ட் டால்ஸ்டாய் போன்ற நான்கைந்து புத்தகங்கள் எழுதி உலகப் புகழ்பெற்றார். ஒருமுறை அவர், 'காந்தியிடம் எல்லாம் சரிதான். எனக்கு என்ன பயம் என்றால் அவரிடம் அறிவுஜீவித் தனமான வாழ்வுக்கு இடமில்லை' என்றார். ஆகவே, அறிவுஜீவித்தனமான வாழ்வு என்றால் நம் சொந்த மனத்தையே பரிசோதிப்பது. அப்படியென்றால், அப்போது நாம் தேடுவது, சிந்தனைக்கு உள்ளிருக்கும் தர்க்க நேர்மையை. ஆத்மாவின் அனுபவ நேர்மையை ஆதரித்துச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் அதற்கில்லை. சிந்தனைக்கு ஒரு தர்க்க நேர்மை இருக்கிறது. அது தர்க்கத்திலேயே நிரூபணத்தையும் பெற்றிருக்கும். அதை அனுசரித்தால் அது விளையாட்டுங்கூட. அது கலையுங்கூட. தத்துவத்தில் விளையாட்டின் குணம் இருக்கிறது. கடவுள் லீலையின் குணம் இருக்கிறது. காந்தியிடம் அதற்கும் வாய்ப்பில்லை என்று க்ரீனுக்குத் தோன்றியது. அப்படித் தோன்றச்செய்வதாலேயே காந்தி அறிவுஜீவிகளுக்குச் சவாலானார். இல்லாவிட்டால் அறிவுஜீவிகளுக்குச் சவாலே இல்லை.
நீங்கள் ஓர் அமைப்பில் காந்தி யைப் பொருத்தப்போனால், அவர் அதில் சிக்கவேமாட்டார். அதற்குக் காரணம் அவரது அளவுகோல் பகுத்தறிவின் தர்க்கம் சார்ந்தது அல்ல. பகுத்தறிவின் தர்க்கத்தில் மட்டும் காணக்கூடிய நேர்மை அல்ல அவர் கடைபிடித்தது. தன் சொந்த வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு எவ்வளவு சாத்தியமென்பதைச் சார்ந்திருந்தது அவரது நேர்மை.
தற்காலிகமாகக் கிடைக்கும் நிரூபணம் நீண்ட காலத்துக்கான ஒரு செயல்திட்டமாகவும் மீந்திருக்க வேண்டும் காந்திக்கு. காந்தி மனிதனின் நடத்தையைப் பற்றி அதிசயமான ஒன்றைச் சொன்னார். மனிதர்களின் ஆற்றல் இன்னதெனத் தீர்மானிக்கூடிய அளவு மானுட வரலாறு நமக்குத் தெரியாது. மனிதர்களால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை அறியுமளவுக்கு நாம் நீண்ட காலம் வாழவில்லை என்றார். அதாவது, காந்திக்கு எவ்வளவு தற்காலிகத்தனம் இருந்ததோ அதேயளவு சாசுவத நிலையிலும் சில சாத்தியப்பாடுகளைப் பற்றி அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார். இது லெனினுக்கும் இருக்கவில்லை. மாவோவுக்கும் இருக்கவில்லை. கார்ல்மார்க்ஸுக்கும் இருக்கவில்லை. அதாவது, அவர்களது சிந்தனை உலகத்தில் இருந்திருக்கலாம். ஆனால், புறநிலையில் இருக்கவில்லை. தன்மீது தான் செய்துகொண்ட பரிசோதனைகளைப் பற்றிக் காந்தி தானே உண்மை விளக்கம் செய்துகொண்டார். இறுதியில் தான் பிரம்மச்சாரியாக இருக்கிறோமா இல்லையா எனத் தெரிந்துகொள்வதற்காக ஒரு பெண்ணோடு நிர்வாணமாகப் படுக்கும் அளவுக்குப் போயிருந்தார் காந்தி. அவர் செய்தது தவறு எனக் கிருபளானி போன்றவர்கள் சொன்னபோதுதான் அவருக்கு அது தவறு எனத் தெரிந்தது.
முஸ்லிம்கள் தங்கள் இறைத்தூதரைக் கடவுள் எனப் புரிந்துகொள்ளக் கூடாது என்னும் காரணத்துக்காக இறைத்தூதரின் பெயரைச் சொன்னவுடன் கடவுளின் கருணை சொன்னவர்மேல் இருக்கட்டும் என்கிறார்கள். அது அற்புதம். ஏனென்றால், இறைத்தூதரைக் கடவுளாகவிடக் கூடாது. தங்கள் குருவைக் கடவுளாகவிடக் கூடாது என்னும் இந்தப் பிடிவாதம் உள்ள வேறொரு மதம் உலகத்தில் இல்லை. காந்தியைப் பொறுத்த அளவிலும் இது உண்மை. தான் வெறுமனே ஒரு மனிதன் என்னும் புரிதலோடு இறுதிவரை அவர் வாழ்ந்தார். வெறும் மனிதனாக இருந்துகொண்டே அவர் மகாத்மாவானார். மகாத்மா என்றவுடனே அவர் வெறும் மனிதர்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. கடைசிவரை அவருக்குக் கோபம் வந்தது. சலிப்பேற்பட்டது.
கடைசிக் காலத்தில், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்திய சுயராஜ்ஜியம் தொடர்பாக நேருவுக்குக் காந்தி ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தின் ஒரு வாக்கியம் எனக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது. 'உங்களுக்கு நான் இந்தக் கடிதத்தை இந்துஸ்தானியில் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுதவேண்டுமா எனத் தெரியவில்லை' என்கிறார். நான் அந்தக் கடிதத்தைப் படித்தது ஆங்கிலத்தில். அவர் ஆங்கிலத்தில்தான் அதை எழுதினாரா என்பது எனக்குத் தெரியாது. அவர் இந்துஸ்தானியில் எழுதியிருந்தால் நேருவுக்கு அனேகமாகத் தன் கடிதத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்குமோ என்னவோ என்னும் சந்தேகங்கூடக் காந்திக்கு இருந்ததாக எனக்குத் தோன்றுகிறது.
'நீங்கள் என்னுடைய இந்திய சுயராஜ்ஜியத்தைத் தீவிரமாகக் கவனித்ததாக எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் இந்தியாவின் எதிர்காலத் தலைவராகக்கூடியவர். என் கனவை நனவாக்க வேண்டியவர்.' நேருவையே தன் வாரிசாகக் காந்தி தேர்ந்தெடுத்ததால் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்கலாம். அதற்கு நேரு பதில் எழுதுகிறார். 'நம் கிராமங்களில் நம் எதிர்காலம் இல்லை. அவை மூடநம்பிக்கைகளின் முடுக்குகள்.' இந்த மேற்கத்தியப் பிரச்சாரப்படியான நவீனத்துவத்தோடு நேருவுக்கும் ஓர் இலட்சியம் இருந்ததால், மொத்தப் பிரபஞ்சமே தற்கொலைப் பாதையில் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும் என அவர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் நேரு எழுதுகிறார். ஏதாவது செய்வதற்குச் சாத்தியப்பட்டவர் எதுவும் செய்வதற்குச் சாத்தியமில்லை என எழுதுகிறார். அவர் ஏதாவது செய்திருக்கலாம். ஏனென்றால், மக்களின் பேராதரவு பெற்ற நேருவைப் போன்ற ஒரு தலைவர்தான் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
காந்திக்கும் நேருவுக்கும் இப்படி விவாதம் இருந்தது. அவ்வாறே காந்திக்குத் தாகூரோடும் விவாதம் இருந்தது. நான் நேஷனல் புக் ட்ரஸ்டின் தலைவராக இருந்தபோது, ஒரு புத்தகம் வெளியிட வேண்டுமென விரும்பினேன். அதன் பிறகு அது வெளியாயிற்று. விணீலீணீtனீணீ ணீஸீபீ tலீமீ றிஷீமீt என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். காந்திக்கும் தாகூருக்கும் இடையே நடந்த விவாதம் பற்றிய புத்தகம் அது. மிக அற்புதமான புத்தகம். எல்லா மாணவர்களும் படிக்க வேண்டிய அடிப்படையான பாடத்திட்டப் புத்தகம். நம் நாட்டின் சொரூபம் எப்படியிருக்க வேண்டும், நம் சமூகத்தின் சொரூபம் எப்படியிருக்க வேண்டும் என இரண்டு மகானுபவர்கள் விவாதிக்கிறார்கள். காந்தியை மகாத்மா என்று அழைத்தது தாகூர்; தாகூரைக் குருதேவ் என அழைத்தது காந்தி. ஆனால், காந்தி நல்ல சீடனாக நடந்துகொள்ளவில்லை. இவர் மகாத்மா எனத் தெரிந்தும் சண்டையிட்டார் தாகூர். இந்தக் கருத்து வேறுபாடு இருவருக்குமிடையிலான உறவில் நமக்கு மிக முக்கியமானது. மகாத்மா அன்ட த பொயட்ஐப் படிக்கும்போது, சில சமயம் காந்தியே கவிஞர் எனவும் தாகூர் அதிகம் காரியவாதியாகவும் தோன்றுகிறது.
காந்தி மனிதராக மட்டுமே இருந்து - எந்தச் சிறப்பான சக்தியும் தன்னிடமில்லை எனத் தெரிந்து - ஆனால் தொழில்நுட்பவாதிகளுக்கு இருப்பதைக்காட்டிலும் அதிகமான சக்தியைப் பெற்றிருந்தார். காந்தியின் பேரனான ராமச்சந்திர காந்தி சொல்வார், 'தொழில்நுட்பவாதிகளின் நோக்கம் அசாத்தியமானதைச் சாத்தியமாக்குவது. அது தொழில்நுட்பத்தின் செயல்திட்டம்.' காந்திக்குத் தொழில்நுட்பவாதியின் குணம் இருந்தது. ஒரு பிடி உப்பை அவர் தூக்கிப் பிடித்த கணமே மொத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் சரிந்தது. அஷிஸ் நந்தி சொன்னதாக நினைவு. 'இந்தியா சுதந்திரம் பெற்றது ஆகஸ்ட் 15இல் மட்டுமல்ல; காந்தி ஒரு பிடி உப்பைக் கடற்கரையில் நின்று தூக்கிப்பிடித்தபோதே இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது.' உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது, லட்சக்கணக்கானவர்களைச் சிறையிலடைக்க வேண்டிவந்தது. அவர்கள் யாரும் பழிவாங்கும் இம்சையில் இறங்கவில்லை. பிரிட்டிஷாருக்கு embarassment ஏற்பட்டது.
எங்கெங்கும் உப்புக் காய்ச்சி ஜனங்கள் சட்டத்தை மீறினார்கள். ஆனால், எல்லோரையும் சிறையிலடைப்பதென்றால், அவ்வளவு இடத்திற்கு எங்கே போவது? ஆனால், அவர்களைத் தண்டிக்காவிட்டால், அரசாங் கமே இல்லை என்றாகும். எப்படிப்பட்ட சாதூர்யம் பாருங்கள் காந்திக்கு. அதை ஒருவகையான புத்திசாலித்தனம் எனச் சொல்லலாமா அல்லது கன்னிங் எனச் சொல்லலாமா? அது இருந்தது காந்திக்கு. அவர் வெறுமனே மனிதர் மட்டுமே எனச் சொன்னேன். அவருக்கு அவர் பிறந்த ஜாதியின் வைசியக் குணம் இருந்தது. கடைசிவரைக்கும் அவரிடம் ஒரு குஜராத்தியின் குணம் இருந்தது. இறுதிவரைக்கும் ஒரு வழக்கறிஞரின் பண்பு இருந்தது. அவையெல்லாம் இருந்தும் காந்தி அவற்றை மீறிக்கொண்டே இருந்தார். அதனாலேயே அவர் மனிதர். ஆனாலும் அவரிடம் பொய் இருக்கவில்லை எனத் தோன்றும். தன் பிள்ளைகளுடனும் மனைவியுடனும் அவர் போட்ட சண்டைகளிலும் இதைக் காணலாம். ஆனால், காந்தியைவிடவும் காந்தியத்தை அட்சரசுத்தமாக நம்பியவர் வினோபாபாவே. காந்தியைக் கேலிச்சித்திரம் வரைவதென்றால் நமக்குத் தெரிவது வினோபாபாவே. அவர் காந்தியை அப்படியே நம்பினார். காந்தி கால்நடையாகவே சென்று சத்தியாக்கிரகம் செய்துகொண்டிருந்தார். வினோபா மொத்த தேசத்தையும் கால்நடையாகவே சுற்றினார். காந்தி இரண்டு மூன்று நாள்கள் மவுன விரதமிருந்தார். வினோபா வருடக்கணக்கில் மவுன விரதமிருந்தார். பிரம்மச்சரியத்திலும் அப்படியே. காந்தியின் பிரம்மச்சரியமே வேறுவகையானது. கிருபளானி அவர்கள் வயதானவர். அவர் இளம் வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றபோது, வினோபா சொன்னார், 'இல்லை. இது ஒழுக்கக்கேடு.' ஆனால், காந்தி இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஏங்கியதைக் கண்டபோது, 'நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வளவு விரும்பினால், திருமணம் செய்துகொள்ளுங்கள்' என்றாராம். அதாவது, காந்திக்கு ஒரு சம்சாரியின் குணம் இருந்தது; சகிப்புத்தன்மை இருந்தது. அது அவரைச் சிக்கலான மனிதராக்குகிறது.
காந்திக்குச் சமதையாக நமக்குக் கிடைக்கும் பாத்திரம் ராமன். அதனால்தான் இன்றைக்கும் நாம் ராமனது நடவடிக்கைகள் தொடர்பாக விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். அவன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரியா? சீதையை நெருப்பில் இறங்க வைத்தது சரியா? அவன் ராவணன் தம்பி விபீஷணனோடு ஒப்பந்தம் செய்துகொண்டது சரியா? எல்லா வகையான கேள்விகளையும் கேட்கலாம். அதாவது ராமன் அறம் சார்ந்த ஆளுமை. கிருஷ்ணனைப் பற்றி யாராவது இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புவது உண்டா? அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவனுக்குத் தெய்வத் தன்மை கிடைத்துள்ளது. ஆனால், ராமனுக்கு அப்படி இல்லை. ராமா, கிருஷ்ணா, சிவா என்று லோஹியா அருமையான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அதில் லோஹியா, 'ராமன் ஒழுக்கம் சார்ந்த ஆளுமை' என்கிறார். காந்தியும் அப்படிப்பட்ட ஆளுமை. அதனால்தான் இன்றைக்கும் அவர் சர்ச்சைக்குரியவராகவே இருக்கிறார்.
நம்முடைய திலகர் மிகப் பெரிய தேசபக்தர். அவர், 'இந்தியாவை வெறுமனே தேசமாகப் பார்க்கவேண்டும். இப்போதைக்கு நமக்குள்ள எல்லாச் சண்டைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு முதலில் தேசம் விடுதலையடையட்டும்' என்றார். அம்பேத்கர், 'இல்லை நாடு விடுதலையடைந்தால் மேல்ஜாதிக்காரர்களான நீங்கள் எங்களை ஆண்டு பிரிட்டிஷ்காரர்களின் இடத்தில் உட்கார்ந்துவிடுவீர்கள். எங்களுக்கு அது தேவையில்லை. முதலில் சமூகச் சீர்திருத்தம் நடக்கட்டும்' என்றார். காந்தி என்ன செய்தார் பாருங்கள். இது விசித்திரமான ஒரு விஷயம். ஒரு தேசத்தை ஏககாலத்தில் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் பார்க்கும் வல்லமை காந்திக்கு இருந்தது. இதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நாமெல்லோரும் இந்தியாவைத் தேசமாகப் பார்க்கும்போது அதை ஒரு சமூகமாகப் பார்ப்பதில்லை. அதைச் சமூகமாகப் பார்க்கும்போது ஒரு தேசமாகப் பார்ப்பதில்லை. ஒரு சமூகமாக இந்தியாவைப் பார்க்கும்போது யார் யாரை ஒடுக்குகிறார்கள், பெண்களின் நிலைமை எப்படியிருக்கிறது, இங்கே சூத்திரர்கள் என்னவாகியிருக்கிறார்கள், ஏழைகள் எப்படியிருக்கிறார்கள் என்பவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியுள்ளது. தேசமாகப் பார்க்கும்போது நாமெல்லோரும் ஒற்றுமையாயிருக்க வேண்டும் எனச் சொல்ல வேண்டியுள்ளது. நீங்கள் வெறும் தேசியவாதியாயிருந்தால் முழுத் தேசத்தையும் ஒற்றுமைப்படுத்த முடியாது. ஏழைபாழைகள் இதில் பங்குகொள்ள முடியாது.
ஒருமுறை அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவிற்கு வந்து காந்தியிடம் 'உங்கள் செயல்திட்டம் என்ன?' என்று கேட்டார். அதற்குக் காந்தி, தேசத்தின் அரசியல் நிலைமையின் அடிப்படையில் தன் செயல் திட்டம் என்ன என்பதைச் சொல்லியிருக்க வேண்டும். அதாவது, பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து விடுதலையடைவது தன் செயல்திட்டம் எனச் சொல்லியிருக்க வேண்டும். அவர் ஆச்சரியப்படும்படி காந்தி அப்படிச் சொல்லவே இல்லை. 'என் செயல்திட்டங்கள் மூன்று. முதலாவது இந்து-முஸ்லிம் ஒற்றுமை. இரண்டாவது, தீண்டாமையைக் களைவது. மூன்றாவது, சுதேசி.' நான்காவது என்னவென்று அவர் சொல்வதே இல்லை. ஏனென்றால் இந்த மூன்றும் நிறைவேறினால் பிரிட்டிஷ்காரர்கள் இங்கே இருக்க வேண்டிய அவசியமே இல்லை.
உண்மையில் பிரிட்டிஷ்காரர்கள் தங்களது சரக்குகளை விற்பதற்காக இந்தியாவுக்கு வந்தவர்கள். அவர்கள் நோக்கம் சந்தையைத் தேடுவது. சுதேசிப் போராட்டம் நடத்தியபோது காந்தி மான்செஸ்டருக்குப் போனார். அங்கே மில்கள் மூடப்பட்டிருந்தன. அவர் ஒரு மில்லுக்குப் போய் அங்கே வேலையிழந்தவர்களைச் சந்தித்து 'எங்கள் சுதேசிப் போராட்டத்தால் நீங்கள் வேலையிழந்துள்ளீர்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும்' எனக் கேட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் வேலையிழந்த மிக மிகப் பழுத்த பெண்ணொருத்தி வந்து காந்திக்கு ஒரு முத்தம் தருகிறாள். அது அற்புதமான ஒரு காட்சி. இது சுதேசி. மான்செஸ்டரில் வேலையிழந்த பெண்ணொருத்தியிடம் அன்பு செலுத்தவல்ல சுதேசி.
ரயிலில் முதல் வகுப்பில் அமர்ந்த காந்தியை வெளியே தள்ளிவிட்டபோது, அவருக்கு வெறுமனே கோபம் மட்டும் வந்திருந்தால் அவர் சாவர்கர் ஆகியிருப்பார். அந்தக் கோபத்தோடு அவருக்கு நம் தேசத்தில் நாமும் மற்றவர்களை அப்படி நடத்துகிறோம் எனத் தோன்றியதால் அவர் காந்தியானார். கோபம் மட்டும் தோன்றியிருந்தால் அது பிரிட்டிஷ்காரர்களோடான கிளர்ச்சிக்கு உபகாரமாகியிருக்கும். தன்னைக் கருப்பன் என வெளியே தள்ளிவிட்டபோது, நாம் பறையன் என்று வெளியே நிறுத்துகிறோமல்லவா என நினைவுக்கு வராதிருந்தால் அவர் காந்தி ஆகியிருக்கமாட்டார்.
அதனால் தேசம் என்றதும் நமக்குச் சமூகத்தின் நினைவு வர வேண்டும். சமூகத்தைப் பற்றிய கேள்வி எழுப்பும்போது தேசத்தின் நினைவு வர வேண்டும். திலகர் இறந்தபோது மிகப் பெரிய அளவில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்துகொண்டார்கள். முதல் டாகுமெண்டரி படம் பிடிக்கப்பட்டது திலகர் இறந்தபோது எனச் சிலர் சொல்கிறார்கள். அப்போது ஒருவர் காந்தியின் பத்திரிகையான ஹரிஜனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் கோகலேயைப் பற்றிய விளக்கம் தேவை. கோகலே சற்று லிபரல்வாதி. தான் குரு எனக் காந்தி கருதியது கோகலேயை மட்டுமே. கோகலே நீளமான கோட்டு அணிவார். அது எதற்கு எனக் காந்தி தமாஷ் செய்தால் அது தனக்காக அல்ல ஜனங்களுக்காக என்று கோகலே சொல்வாராம். வயதான காரணத்தால் குனிந்து அந்த நீளமான கோட்டின் பொத்தான்களைப் போடுவது அவருக்குக் கடினமாயிருந்தது. காந்தி அவர் கோட்டின் எல்லாப் பொத்தான்களையும் போடுவாராம். கோகலே காந்திக்கு அவ்வளவு நெருக்கம்.
திலகர் இறந்தபோது யாரோ ஒருவர் தன் பெயரை மறைத்து எழுதிய கடிதத்தின் சாராம்சம் இது: 'நீ திலகர்வாதியாகியிருக்க வேண்டும். நீ வெறுமனே கோகலேயின் சீடன் எனச் சொல்லிக்கொள்கிறாயா? அது பொய்.' காந்தி அதற்கு இப்படிப் பதில் எழுதினார்: 'நீங்கள் உங்கள் பெயரை மறைத்து ஏன் எழுதினீர்களோ தெரியவில்லை. நான் உண்மையைச் சொல்கிறேன். திலகர் மிகப் பெரியவர். அவருக்கு அருகில் செல்லும்போது எனக்குப் பயமுண்டாகிறது. நான் ஒருபோதும் அவருடன் சவுகரியமாக உணர்ந்ததில்லை. ஆனால், கோகலேவோடு நான் எப்போதும் சவுகரியமாக இருந்தேன்.'
இந்த வார்஢த்தைகளை உறுதிப்படுத்துவதைப் போல லோஹியா சொன்ன ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஆட்சியைவிட்டு வெள்ளையர்கள் உடனடியாக விலக வேண்டும் என்று அவர் ஒரு தீர்மானத்தைச் சமர்ப்பித்தாராம். காந்தி அதை எதிர்த்தார் என்பது லோஹியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மறுநாள் வாக்கிங் போனபோது காந்தி சொன்னாராம், 'இப்போதைக்கு நம்மால் செய்ய முடியாதவை தொடர்பாகத் தீர்மானம் கொண்டுவருவது உணர்ச்சிபூர்வமான சலுகை அல்லது அரசியல் காட்சிப் பொருளாகிவிடும். உண்மையான புரட்சிக்காரன் அமைதியானவனாகவும் இருக்க வேண்டும்.' அதனால்தான் காந்திக்குத் திலகரைவிடவும் கோகலே அதிகம் பிடித்தமானவராயிருந்தார்.
ஆனால், ஒரு தீர்மானத்துக்கு வந்த பிறகு காந்தி அசைந்துகொடுக்கமாட்டார். தன் நம்பிக்கைக்காகத் தன் தேகம், சொல், மனம் என அனைத்திலும் அதற்கு உண்மையாக நடந்துகொள்வார். தன் மகன் ராஜாஜியின் மகளைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னபோது முதலில் காந்தி வேண்டாம் என்றார். ஏனென்றால் மேல்ஜாதிக்காரப் பெண்களைக் கீழ்ஜாதிக்காரர்கள் மணந்துகொள்ளக் கூடாது என்னும் அளவில் அவர் மரபாளர். அதன் பிறகு அப்படி மணப்பது சரி எனத் தெரிந்த பின்னர் இனிமேல் கலப்புத் திருமணங்களுக்கு மட்டுமே தான் செல்வது எனச் சொன்னார். அறிவு ஜீவிகளான நாம் நாலைந்து அடி முன்னால் எடுத்து வைத்ததுபோலத் தெரிந்தாலும், நாலைந்து அடி பின்னுக்குப் போயிருப்போம். ஆளுகிறவர்கள் யார் என நாம் பார்த்துக்கொண்டிருப்போம். அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்படி சற்றாவது பேசியிருப்போம். காந்தி சமூகம் மற்றும் தேசம் பற்றிய கேள்வியை ஒரு சம்சாரியின் நிலையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார். அதனால்தான் இந்தியாவின் எல்லா ஜனங்களும் அவரோடு தங்களை இனங்கண்டு கொள்வது சாத்தியமாயிற்று.
இன்று இங்கே (உடுப்பி) வந்தபோது முரளிதர், காந்தி 1934இல் உத்தியாவரத்துக்கு வந்த போது தோணியிலிருந்து இறங்கும் படத்தைக் கொடுத்தார். முந்தாநாள் தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தேன். அங்கே என் நண்பர் கங்காதர் இருக்கிறார். காந்தி தீர்த்தஹள்ளிக்கு வந்தபோது வெளியிடப்பட்ட துண்டறிக்கையைத் தேடிப்பிடித்திருக்கிறார் அவர். அது தீர்த்தஹள்ளி நகர மக்கள் வெளியிட்ட துண்டறிக்கை. அதில், 'காந்தி இந்த நேரத்துக்கு வருகிறார். யாரும் மகாத்மா காந்தி ஜே எனக் கத்தக் கூடாது. அவரைச் சுற்றிக்கொள்ளக் கூடாது. அவரோடு கைகுலுக்கக் கூடாது. அவருக்கு வயதாகியிருக்கிறது. களைப்பேற்படும். மேலும், ஜெயகோஷம் போட்டால் அவருக்குப் பிடிக்காது' என்றிருக்கிறது. அதோடு காந்திக்குத் தீர்த்தஹள்ளி ஜனங்கள் கொடுத்த ஒரு விண்ணப்பமும் இருக்கிறது. அதிலுள்ள நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது. 'நாங்கள் கொஞ்சம் கதர் தயாரித்திருக்கிறோம். அதிலிருந்து பணம் சேர்த்துள்ளோம். ஆனால், தீண்டாமை ஒழிப்பில் நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை. நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.' இந்தக் காலத்தில் இப்படி யாரும் உண்மையை எழுதுவதில்லை.
இந்த ஆய்வு மையத்துக்கு ஒரு யோசனை. இது மற்ற எல்லா ஆய்வு மையங்களைப் போல ஆகிவிடக் கூடாது. காந்தி கர்நாடகத்தில் எந்தெந்த ஊர்களுக்கு வந்திருந்தார், அந்தக் காலத்தில் வெளியான செய்திகள் எப்படியிருந்தன, அப்போது ஏதாவது துண்டறிக்கைகள் வெளியிட்டார்களா முதலானவற்றை இங்கே ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
n

பிரிட்டிஷ்காரர்களை விரட்டுவேன் எனக் காந்தி சொல்லவில்லை. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்துவேன், தீண்டாமையை ஒழிப்பேன், கதர்ப் பிரச்சாரம் செய்வேன் என்று சொன்னார். அவ்வாறே உங்கள் ஆய்வு மையமும் ஒரு காரியம் செய்ய வேண்டும். இங்கே சில நண்பர்கள் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக் கிறார்கள். இந்தக் கடற்கரைப் பகுதியில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆபத்து உண்டாகும்படியான காரியங்கள் நிறைய நடைபெறுகின்றன. அவர்கள் இருவரையும் இணைப்பது, ஒருவரோடு ஒருவர் அன்புடனும் தோழமையுடனும் வாழவைப்பது, அவர்களுக்கிருக்கும் மன வேற்றுமைகளைக் களைவது இவை உங்கள் வேலையாக வேண்டும். காந்திக்கு அப்படிப்பட்ட வலிமை இருந்தது. எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்குவருகிறது. முகம்மது அலி ஜின்னா காந்திக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தார். காந்தி அவர் வீட்டிலேயே தங்குவார். ஒருமுறை அவர் காந்தியிடம், 'நீங்கள் மதன் மோஹன் மாளவியாவை வகுப்புவாதி என்று அழைக்க வேண்டும்' எனச் சொன்னார். அதற்குக் காந்தி, 'நான் ஒருபோதும் மதன் மோஹன் மாளவியாவை வகுப்புவாதி என அழைக்கமாட்டேன்.' இப்படிப்பட்ட மூர்க்கத் தனமான வேண்டுகோளை வைக்காதீர்கள்' என்றார். முஸ்லிம்களையும் இந்துக்களையும் எதிர்கொள்வதில் காந்திக்கு அம்மாதிரியான தைரியம் இருந்தது. காந்திக்கு அவர்கள் இருவரிடமும் அன்பிருந்ததால் தயவு தாட்சண்யமில்லாமல், உண்மையாக அப்படிச் சொன்னார்.
நம்மில் யாருக்கும் யார்மீதும் உண்மையான அன்பு இல்லை. நாம் செய்வதெல்லாம் ஓட்டு வங்கிக்காகவே. இந்துக்களின் அன்பைப் பெறுவது ஓட்டு வங்கிக்காக. முஸ்லிம்களின் அன்பைப் பெறுவது ஓட்டு வங்கிக்காக. நமக்கு அவர்களது நலம் தேவையில்லை. அவர்கள் முன்னேறுவது தேவையில்லை. இந்தக் காந்தி ஆய்வுமையம் நிரந்தரமாகத் தோழமை வாழ்க்கைக்காக அன்போடு என்ன செய்ய வேண்டுமோ அந்தக் காரியத்தைச் செய்வதற்கு முன்வர வேண்டும். நாம் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். நாம் எப்படிச் செய்வது என்று யோசிக்கக் கூடாது. சுதந்திரமாகச் செய்ய வேண்டும். இங்கே அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்களுக்கு உதவ வேண்டும். கடற்கரைப் பகுதியைப் பற்றி எனக்கிருக்கும் ஆதங்கங்களில் இதுவும் ஒன்று.
எனக்கு இன்னோர் ஆதங்கமும் இருக்கிறது. காந்தி சொந்த மண்ணை மிகவும் நேசித்தவர். இன்று வைஷ்ணவ ஜனதோ பாடியபோது, அது என்னை மிகவும் பாதித்தது. குஜராத்திப் பாடல் ஒன்றைக் காந்தி தேசியப் பாடலாக்கியிருக்கிறார். உடுப்பிக்கும் சொந்த மண்ணுக்கே உரிய குணம் இருக்கிறது. இங்கு எவ்வளவோ பேர் தத்தம் தாய்மொழிகளில் பேசுகிறார்கள். துளு, கொங்கணி, பேரி என்று ஜனங்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக் கொடுப்பதில்லை. உலகமயமாகும் சூழலில் நாம் இந்தத் தேசத்திலேயே இல்லை. நாம் ஏற்கனவே நியூயார்க்குக்கோ வேறெதற்கோ சம்பந்தப்பட்டிருக்கும் பிரம்மை தென் கர்நாடக மாவட்டத்திற்கும் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் சமீபத்தில் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை எழுதியுள்ள எழுத்தாளினி சொல்கிறார்: மனிதனின் முதல் கனவு பூமியைவிட்டு விடுதலையடைய வேண்டும் என்பது. முதல் விண்கலம் ஏவப்பட்டபோது பூமியிலிருந்து விடுதலைபெற்றுவிட்டோ ம் என நாம் புரிந்துகொண்டோ ம். நாம் பூமியிலிருந்து விடுதலையடைய வேண்டும்; நம் சமூகத்திலிருந்து விடுதலையடைய வேண்டும். சமூகத்திலிருந்து நான் விடுதலையடைந்த பிறகு அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதபோது வேறென்ன வேண்டும்? அப்போது நானே என் நலனுக்காக மட்டும் மிகுந்த சுயநலத்தோடு கட்டமைத்துக்கொள்ளும் இன்னொரு பிரம்மையான சமூகம் உருவாகும். அப்போது என் நண்பர்கள் இருக்கப்போவது ஃபிரான்சில், இத்தாலியில், நியூயார்க்கில். எல்லாத் தேசங்களிலும் பெரிய பெரிய ஆள்கள் இருப்பார்களல்லவா? அவர்கள் மட்டுமே என் நண்பர்கள். என் சுற்றத்தார்கள்.
இப்படிப்பட்டவர்களைக் காஸ்மாபொலைட் என்கிறார்கள். நேருவிடமும் கொஞ்சம் காஸ்மா பொலைட் குணம் இருந்தது. ஆனால், அவர் காந்திக்கு மிக நெருக்கமாக இருந்ததால், யுனிவர்சலிஸ்ட் குணத்தை அவரால் முழுக்கக் கைவிட முடியவில்லையோ என்னவோ? அப்படிக் கைவிட்டிருந்தால் நேரு எல்லோருக்கும் வாக்குரிமை அளித்திருக்கமாட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற தருவாயில், எல்லோருக்கும் ஓட்டுரிமை தருவதே முதல் தீர்மானமாயிருந்தது. அது உலகளாவிய செயல்திட்டம். இப்போது, எல்லோருக்கும் ஓட்டுரிமை தேவையா என்று நம் மிஜி-ஙிஜிக்காரர்களைக் கேட்டால், தங்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உலகளாவிய செயல்திட்டம் தேவையற்றது. சாமான்ய ஜனங்கள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும். காந்தியின் கண்களுக்கும் ஜனங்கள் தெரிந்தார்கள். ஆனால், நாஸர், நேரு போன்றவர்களுக்கும் கொஞ்சம் காஸ்மாபாலிடன் செயல் திட்டமும் இருந்தது. அது உலகளாவிய அலையாக இருந்தது. அதில் அவர்களும் இருந்தார்கள். நான் தனிப்பட்ட முறையில் அவர்களை இகழவில்லை. நாம் இப்படிப்பட்ட ஓர் அலையில் இருந்துகொண்டே அதனால் லாபமடைந்தபடியே அதற்கு எதிராகப் பேசுவது ஒரு வகை மோசமான நம்பிக்கையாகும்.
ஆனால், அனேகமுறை எப்படிப்பட்ட மனிதர்களுக்கும் நிம்மதி வேண்டும் எனத் தோன்றும்போது உலகமயமாதல் கடினமானதாகிறது. பிள்ளைகளுக்கும் தாங்கள் வளர்வதற்கு நிம்மதி வேண்டும். இந்த உலகத்தில் பிள்ளைகள், முதியவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு வெறும் இளைஞர்கள் மட்டுமே உள்ளார்கள் என்னும் உலகமயமாக்கப்பட்ட செயல்திட்டத்தைப் பிடித்துக்கொண்டு நம்மை ஆளுகிறவர்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் பகலுக்கு இந்தியாவின் இரவைக் காலனியப்படுத்தியிருக்கிறார்கள். இதைப் பற்றி விமர்சனபூர்வமாகப் பேச வேண்டும். எனக்கும் ஒரு மகன் இருந்து அவனுக்கு வேலை இல்லாவிட்டால், நானும் அவனைக் கால் சென்டருக்கு அனுப்பியிருப்பேனோ? அதனால் மோசமான நம்பிக்கையில் பேசக் கூடாது. இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.
காந்திக்குத் தெரிந்திருந்த விஷயம் நமக்குத் தெரியவில்லை. நாம் அறிவுஜீவிகளாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தக் கஷ்டங்கள் தீர வேண்டுமானால் காத்திருக்க வேண்டும். இப்படிக் காத்திருக்கும்போது பிள்ளைகள் பிறந்துகொண்டேயிருப்பார்கள். நாம் இறந்துகொண்டேயிருப்போம். இல்லாவிட்டால் இந்த உலகத்தில் யாராவது வாழ்வது சாத்தியமா? இன்னமும் அந்த ஸ்டாலினும் ஹிட்லரும் இருந்திருப்பார்கள். அப்படிப்பட்ட துஷ்டர்களை விடுங்கள். எல்லாப் புனிதர்களும் சாகாதிருந்தால் அவர்களும் நமக்குத் தொந்தரவாகியிருப்பார்கள். உண்மையில் சாவு ஓர் அதிசயந்தான். பிறப்பும் அப்படியே. புதிதாகப் பிறப்பவர்களின் செயல்திட்டம் என்னவாயிருக்குமோ? ஆனால், அவர்களுக்கு எந்தச் செயல்திட்டமும் இல்லாதவாறு நாம் இந்தப் பூமியையே நாசப்படுத்திவிட்டால், என்ன கதி? இந்தப் பூமி இருக்கும்வரைக்கும் அவர்களுக்கு வேறு செயல்திட்டங்கள் இருப்பதற்குச் சாத்தியமுள்ளது. பூமித்தாய்க்கு மிகச் சகித்துக்கொள்ளும் சக்தி இருக்கிறது. எதுவரை நாம் பூமித்தாயைக் காப்பாற்றுகிறோமோ அதுவரைக்கும் நமக்குப் பிறகு வருகிறவர்களுக்கு அவர்களுக்கேயான செயல்திட்டங்கள் இருப்பது சாத்தியம். இப்போது இங்கே நாகார்ஜுனா* வந்திருக்கிறதாம். அது இதோடு நிற்காது. வேறொன்று வரும். அதன் பிறகு இளையவர்கள் மட்டும் ஹெலிகாப்டர்களில் திரிந்து கொண்டிருப்பதற்கு முடியுமோ! முதியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியில்லாத உலகம் அது.
நமக்கு முன்னாலிருப்பவர்களைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பது காந்திக்கு இருந்த விருப்பம். அதனால் காந்தி ஆய்வு மையம் இனிமேல் மிகப் புரட்சிகரமானதாயிருக்கும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதைக் கேளுங்கள். சீனாவில் லாங் மார்ச் செய்துவிட்டு அவர்கள் அடைந்தது கோகாகோலாவுக்கான தாகத்தை. வங்காளத்தில் நடந்தது என்ன? கம்யூனிஸ்ட் அஜெண்டா ஒன்றும் வித்தியாசமானதல்ல. நவீனப்படுத்த, மேற்கத்தியமயப்படுத்த, ஐரோப்பியமயப்படுத்த, வாழ்வதற்கான பல்வேறு வழிகளை அழிக்கவே அது இருக்கிறது. லெனின் செய்தது இதைத்தான். ரய்தாபி (விவசாய) ஜனங்கள் இருக்கிற வரைக்கும் ரஷ்யப் பண்பாடு இருக்கும் என்று அவர்களை 'குலக்ஸ்' (நில உடமையாளர்கள்) என அழைத்து அவர்களைத் துவம்சம் செய்தார். லெனின் மகத்தான மனிதர். தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றிச் சொல்லவில்லை. செயல்திட்டம் அப்படியிருந்தது. என்ன செய்வது? அது ஷிணிஞீ செயல்திட்டம். செயல்திட்டங்களிலிருந்து தொடங்குகின்றன இப்படிப்பட்ட முன்னேற்றச் செயல்பாடுகள். கம்யூனிஸ்டுகள், காப்பிடலிஸ்டுகள் எல்லோரும் கட்டமைப்பது ஒரே மாதிரியான சமூகத்தைத்தான்.
காந்தியின் கடைசி வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறேன். இருப்பதிலேயே மிகச் சிறிய ராணுவம் இருக்கும் தேசம் வேண்டும் என்பது காந்தியின் கற்பனை. அது வெறும் கனவல்ல. நிஜத்தில் சாத்தியமாகக்கூடிய விசித்திரமான செயல்திட்டம் அது. கிராம ராஜ்ஜியம் ஏற்பட்டால், ஒவ்வொரு கிராம சுயராஜ்ஜியத்துக்கும் முழு அதிகாரமும் இருக்குமானால், அவை எல்லாவற்றின் கூட்டமைப்பு டெல்லியில் உண்டென்றால் அதற்கொரு சிறிய படை மட்டும் இருந்தால் போதும். ஏனென்றால், அதற்குச் சக்ரவர்த்தி இருக்கப்போவதில்லை. ஆனால், யாரும் இந்தியாவைத் தாக்கப்போவதில்லை. ஏனென்றால், இந்தியா அப்போது முள்ளம்பன்றியைப் போல இருக்கும். ஒவ்வொரு கிராம சுயராஜ்ஜியமும் முள்ளாயிருந்தால் யாராவது அதன்மேல் வந்து விழுவது சாத்தியமா? இந்தியா வல்லரசாகும் நம் கனவில் அது கொஞ்சம் முள்ளம்பன்றியைப் போல இருக்கட்டும் என்னும் ஆசையும் இருந்தால் நல்லது.
இங்கே ஒரு நண்பர் சொன்னார், காந்தி போய்விட்டார் என்று. அவர் எங்கேயும் போகவில்லை. தென்னாப் பிரிக்காவின் விடுதலைக்குப் பின்னால் காந்தி இருக்கிறார். அமெரிக்காவின் கருப்பர்களின் விடுதலைக்குப் பின்னால் காந்தி இருக்கிறார். இன்றைக்கும் எந்தப் பலமும் இல்லாத ஜனங்களின் துக்கத்தில் காந்தி இருக்கிறார். யார் ஜனங்களின் துக்கத்தில் நினைவுக்கு வருகிறாரோ அவர் நிலைத்திருப்பார். சந்தோஷத்தில் ஞாபகத்துக்கு வருகிறவர் சந்தோஷம் முடியும்போதே மறைந்துபோய்விடுவார். காந்தி நம் துக்கங்களிலும் சங்கடங்களிலும் நிலைத்திருப்பார்.



No comments:

Post a Comment