Thursday, 13 October 2011


மரணத்தின் ஆடை

நான் முதன்முறையாக
தூக்கிட்டுக்கொள்ள முயற்சித்த துணியை
இப்போதும் வைத்திருக்கிறேன்

மகத்தான அன்பின்
மகத்துவமுள்ள ஒரு பரிசினைப்போல.
வேறெந்த அன்பின் பரிசும்
இவ்வளவு வெதுவெதுப்புடன்
என்னிடம் தங்கியிருக்கவில்லை
இவ்வளவு ஆழமாக
என்னுடன் பிணைக்கப்பட்டிருக்கவில்லை

அதை நான் தேர்வு செயதது
அதன் ஆழ்நீல வர்ணத்திற்காக மட்டுமே
நீலம்
அது மரணத்தின் தூய வண்னம்
அதில்
துக்கமோ பயமோ இல்லை
நான் இந்த நீலக் கடலின் முன்
நின்றுகொண்டிருப்பதுபோல
நான் இந்த நீல ஆகாயத்தின் முன்
நின்று கொண்டிருப்பதுபோல
அந்த நீலத் துணியோடு
அந்த தனியறையில் நின்றுகொண்டிருந்தேன்

மேலும்
நான் அதைத் தேர்வு செய்தது
அதன் மிருதுவான தன்மைக்காக மட்டுமே
நான் அவ்வளவு மிருதுவான மரணத்தை
விரும்புகிறேனா என்று வியப்பாக இருக்கிறது
அவ்வளவு மெல்லியது அது
இதோ இப்போது மடித்து வைத்திருக்கிறேனே
அதே போல ஒரு சிறிய கைப்பையில்
அதை நான் வைத்திருந்தேன்
அது என்னைத் துன்புறுத்தவே இல்லை
கொஞ்சம்கூட மரண பயத்தை ஏற்படுத்தவில்லை
ஒரு குழந்தையின் அணைப்பைப்போல
ஒரு குளிர்ந்த காற்று
நம்மைக் கடந்து செல்வதுபோல
அவ்வளவு மிருதுவான ஒன்று
ஒரு கணத்தில் திடமானதாக மாறிவிடுகிறது
நீங்கள் உங்கள் வாழ்வில்
வேறெதுவும் இவ்வளவு விரைவாக
மாறுதலடைவதைப் பார்த்திருக்க மாட்டீர்கள்
அது தொண்டையின் முடிச்சுகளை அழுத்தும்போது
நீங்கள் காற்றுக்காக ஏங்கித் தவிக்கும்போது
பற்றிக்கொள்ள எதுவுமே இல்லாமல்
அந்தரத்தில் போராடும்போது
அதன் எடை எல்லையற்றதாக மாறிவிடுகிறது
நமது எடையையும்
எல்லையற்றதாக மாற்றிவிடுகிறது
நான் அப்போதும்
அது எவ்வளவு மிருதுவானது என்பதை
ஒரு கணம் நினைக்கவே செய்கிறேன்

அது என்னைக் கைவிட்டது
பாதிப் புணர்ச்சியில் கைவிடப்படுவதுபோல
எனக்கு அன்று கடுமையாகத் தலைவலித்தது
பாதிக் கனவில் விழித்தெழுவதுபோல
எனக்கு அன்று ஒரு மிடறு தண்ணீர்
தேவையாக இருந்தது
பாதிப் பயணத்தில் திருப்பி அனுப்பப்படுவதுபோல
எனக்கு அன்று எங்கே போவது என்று தெரியவில்லை
பாதி வதையும் பாதி கருணையுமுள்ள
வாழ்விற்கு மீண்டும் ஒரு முறை திரும்பி
என் நீலத் துணியால் முகத்தை
மூடிக்கொண்டு அழுதேன்
முதன் முறையாக
தூக்கிட்டுக்கொள்ள முயற்சித்த துணியை
எல்லா மகிழ்ச்சியான தருணங்களிலும்
நான் அணிந்துகொண்டிருக்கிறேன்
ஒரு ஆல்பத்தைக் காட்டுவதுபோல
என் நண்பர்களுக்கு அதைக் காட்டுகிறேன்
ஒரு ரகசிய ஆயுதத்தை எடுத்துப் பார்ப்பதுபோல
தூங்க முடியாத பின்னிரவுகளில்
எடுத்துப் பார்க்கிறேன்
ஒரு உடலின் வாசனையை
அந்தத் துணியில் மறைத்து வைக்கிறேன்

அன்பே
உனக்குத் தெரியுமா
இன்று நான் உன்னை சந்திக்கவரும்போது
அந்தத் துணியால்தான்
என் முகத்தை மூடிக்கொண்டு
இங்கே வந்தேன்



பரஸ்பரம்

பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்கு புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்

கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்


தேடல்

தவறாக அழைக்கப்பட்ட
தொலைபேசி எண்ணின்
மறுமுனையிலிருந்து
யாரோ ஒரு  குழந்தை
அப்பா நீ எங்கேயிருக்கிறாய்
என திரும்பத் திரும்ப
கேட்டுக் கொண்டேயிருக்கிறது


நான்
அதன் அப்பா இல்லை
என சொல்லி முடிப்பதற்குள்
என் வீடுவரை
தேடி வந்துவிட்டது



தலைவிரி கோலம்


இப்படித்தான்
அமர்ந்திருந்தாள்
அசோகவனத்திலும் ஒருத்தி

இடமுலை திருகி
எரியூட்டியவளுக்கும்
இதுதான் முகம்

துகில் உரிந்த சபையில்
துடித்தெழுந்தவளின்
தோற்றமும் இப்படித்தான் இருந்தது

கதறக் கதற சிசுக்களைக்
கிணற்றடிக்கு இழுத்து வந்தவளும்
வேறெப்படியும் இருக்கவில்லை

ஆணின் துயரத்தை
எத்தனை வார்த்தை சொன்னாலும்
அது துயரம் போலவே இருப்பதில்லை

உனக்கோ
இருக்கவே இருக்கிறது
எப்போதும்
இந்தத் தலைவிரி கோலம்


 
 

No comments:

Post a Comment