Monday, 24 October 2011

நாம் குடிக்கும் நீரில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? தண்ணீர் குடிக்காமலே நம்மால் வாழ முடியுமா?

மனிதன் 65 சதவிகிதம் தண்ணீரால் ஆனவன். தண்ணீர் இல்லையேல் மனிதன் இல்லை. தக்காளியில் இருப்பது 95 சதவிகிதம் தண்ணீர்.
உலகிலேயே மிகச் சிறந்த தூய்மையான (மினரல்) தண்ணீர் என்று எடுத்துக்கொண்டால், அது பிரான்ஸ் நாட்டில் இருக்கும் Perrier என்கிற குடிநீரே! தூய்மையான தண்ணீரில் கால்ஷியம், மக்னீஷியம், இரும்பு போன்ற பல உண்டு. சத்துக்காக அல்ல; சுவைக்காக! அதெல்லாம் அகற்றப்பட்ட 'டிஸ்டில்டு வாட்ட'ரை வாயில் விட்டுக்கொண்டால், தண்ணீரின் சுவையே அதில் இருக்காது. ஒரு ஸ்பூன் அருந்தினால், அதைத் துப்பி விடுவீர்கள்.

தண்ணீர் இல்லாத உடல் சில நாட்களுக்குள் மரணத்தை நோக்கிச் சரிய ஆரம்பிக்கிறது. உதடுகளும், பற்களைத் தாங்கும் ஈறும் முழுமையாகக் கறுத்துப் போய் வெடித்துவிடுகின்றன. நாக்கு அடியோடு வறண்டு, மூக்குகூடச் சுருங்கித் தொங்கிவிடும். இமைகளை மூட முடியாது. பிறகு, டீஹைட்ரேஷன் ஏற்பட்டு, திடீரென்று சுருண்டு விழுந்து... மரணம்!

நம் நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு, அரபு நாடுகளைப் போல் தண்டனை கொடுத்தால் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும் என்று சிலர் சொல்கிறார்களே, சாத்தியமா?


நிறையப் படங்களோடு கூடிய Crime - punishment என்கிற புத்தகத்தில் நூற்றுக்கணக்கான தண்டனைகளை விவரித்திருக்கிறார்கள். அரபு நாட்டில் சில குற்றங்களுக்கு தலையைச் சீவுகிறார்கள். சிங்கப்பூரில் சவுக்கடி நடைமுறையில் உண்டு. யு.எஸ்-ஸில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தண்டனைகள் மாறும். நம் நாட்டில், நம்முடைய சட்டத்தைத்தான் பின்பற்ற முடியும். இப்போது மரண தண்டனைக்குப் பல நாடுகளில் எதிர்ப்பு இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். உதாரணமாக, பிறகு அவர் நிரபராதி என்று தெரியவந்தால்?!

சிரித்தாலும் கண்ணீர் வருகிறது, அழுதாலும் கண்ணீர் வருகிறது. இதன் மர்மம் என்ன?

பொதுவாக, விலங்குகள் அழுவது இல்லை. யானை, குதிரை மட்டும் அழுவதாகச் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதெல்லாம்கூட, மனிதக் கண்ணீருக்கு இணையானதா என்பது கேள்விக் குறி. பரிணாம வளர்ச்சியில் கண்ணீர், மனிதர்களுக்கு இடையில் ஒரு தொடர்பாகப் பயன்பட ஆரம்பித்தது (to communicate). கணவனும் மனைவியும் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது, மனைவி அழ ஆரம்பித்தால், உடனே வாதம் நின்றுபோகிறது. வார்த்தைகள் ஓரமாக ஒதுக்கப்படுகின்றன. தற்காப்புக்கான ஒரு இன்டர்வெல் மாதிரிதான். குழந்தை கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போது அழாமல் இருக்கலாம். அம்மா ஓடி வந்து வாரி அணைத்துக்கொள்ளும்போது அழத் தொடங்குகிறது. அழுகை பிடிக்காத ஓர் ஆராய்ச்சியாளர் கண்ணீர் விடுவதை 'eye pissing’ என்கிறார். ஆனால், அழுகைமனசை லேசாக்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில், நாம் எப்போதுமேஅழுதுகொண்டு தான் இருக்கிறோம். அதாவது, ஒவ்வொரு முறை இமை மூடித் திறக்கும்போதும், கண்ணின் ஓரமாக இருக்கும் லாக்ரிமல் சுரப்பிகள் லேசாக அழுத்தப்பட்டு, கண்ணீர் சுரக்கிறது - கண்களை ஈரமாக வைக்க.
கண்ணீரில் கிருமிநாசினிகள் (antibacterials) உண்டு. இந்த எல்லாவற்றையும் இயக்கும் 'பரம் பொருள்’ மூளையே. வலியால், எரிச்சலால் ஏற் படும் கண்ணீருக்கும், உணர்ச்சி மேலிட்டு அழுவ தற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டாவதால் ஏற் படும் கண்ணீரில், மாங்கனீஸ் மற்றும் புரோட்டீன் அதிகம் இருக்கும். அதாவது, கண்ணீரை 'லேப்’பில் சோதித்து, ஏன் அழுதார் என்று கண்டு பிடித்துவிடலாம்!

ஒரு செயலைச் செய்து முடிக்கத் தேவை... விடாமுயற்சியா, கடவுள் அருளா?  

விடாமுயற்சியுடன் உழைத்து ஒரு செயலை முடிக்க, கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்!

பிறப்பைத் தீர்மானித்த இறைவன், இறப்பின் ரகசியத்தை மறைத்தது ஏன்? 

நீங்கள் எப்போது பிறக்கிறீர்கள்?
'வெளியே வரும்போதுதான்’ என்றா நினைக்கிறீர்கள்? அல்லது கருவாக உருவாகும்போதா? அல்லது அப்பாவிடம் பாதியாகவும் அம்மாவிடம் பாதியாகவும் இருந்தபோதா? பிறப்புக்கு முன்னும் ரகசியம்தான். இறந்த பின்னும் ரகசியம் தான். இந்த இரண்டு ரகசியங்களும் தெரிந்துவிட்டால், நாம் மன நோயாளியாக ஆகி, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்ட காலத்தை அனுபவிக்காமல் போய்விடுவோம். வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இந்த இரண்டு ரகசியங்களையும் மறைத்துவைத்துவிட்டான்!
 
  

No comments:

Post a Comment