Thursday, 6 October 2011

நாலடியார்

ஈகை 

இல்லா இடத்தும், இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து, மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாவாம், ஆண்டைக் கதவு.

(பொ-ள்.) இல்லாவிடத்தும் - பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் - கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து - பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு - ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா - அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.

(க-து.) ஈகைக் குணமுடையவர்கள் மறுமையின்பம் பெறுவர்.


 பழவினை
 
வளம் பட வேண்டாதார் யார்? யாரும் இல்லை;
அளந்தன போகம், அவர் அவர் ஆற்றான்;-
விளங்காய் திரட்டினார் இல்லை; களங் கனியைக்
கார் எனச் செய்தாரும் இல். 

பொ-ள்.) வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை - செழுமை பெற விரும்பாதவர் உலகில் ஒருவருமில்லை, அளந்தன போகம் அவரவர் ஆற்றல் - ஆனால் இன்பநுகர்வு அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளன. விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும் இல் - விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழக்கத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல வென்க.


(க-து.) அவ்வவற்றின் முறைப்படியே அவையவை அமைதலின், வளம் பெற விரும்புவோர் அதற்கேற்ப நல்வினை செய்தல் வேண்டும்.

(வி-ம்.) யார்யாரு மில்லை என்னும் அடுக்கு எஞ்சாமைப் பொருளது. ஆற்றால் - வினைவழியே. ‘திரட்டினாரில்லை; செய்தாருமில்' என்றது, எடுத்துக்காட்டுவமையணி. 
  

மெய்ம்மை 

யாஅர், உலகத்து ஓர் சொல் இல்லார்?-தேருங்கால்-
யாஅர், உபாயத்தின் வாழாதார்? யாஅர்,
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்,
கடைபோகச் செல்வம் உய்த்தார்?
    
   

(பொ-ள்.) தேருங்கால் - உலகியலை ஆராயுமிடத்து, யார் உலகத்து ஓர் சொல் இல்லார் - உலகத்தில் ஒரு பழிச் சொல் இல்லாதவர் யார்?, யார் உபாயத்தின் வாழாதார் - யாதானும் ஓர் ஏதுவினால் உலகில் வாழாதவர் யார்?, யார் இடையாக இன்னாதது எய்தாதார் - வாழ்வின் இடையே இடர் அடையாதார் யார்?, யார் கடைபோகச் செல்வம் உய்த்தார் - முடிவுவரையிற் செல்வத்தை நுகர்ந்தவர் யார்?, யாருமில்லை.

(க-து.) இன்ப துன்பங்கள் கலந்து வருவதே உலகியற்கை.

(வி-ம்.) யார் என்னும் வினா ஒருவருமிலர் என்னும் விடையை உட்கொண்டது. ஈதொப்பதை ‘அறிபொருள் வினா' என்பர் சேனாவரையர்.1 அறியலுறவினை அறிவுறுத்துதலின், இங்ஙனம் வினாவும் விடையாகும் என்பது. உபாயம் என்பது, பலவகைப்பட்ட தொழிலேதுக்களை உணர்த்தும். உய்த்தல் - ஆளல்; ஈண்டு நுகர்தலென்க. 









No comments:

Post a Comment